லஞ்சம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ மிரட்டல்: ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் திடுக்கிடும் புகார்

12


சென்னை: '' எங்களிடம் லஞ்சம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ பாலாஜி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்,'' என கோவளம் பகுதியில் செயல்படும் ஹெலிகாப்டர் நிறுவனம் சார்பில், சபாநாயகர் அப்பாவுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலா சேவை



திருப்போரூர் அடுத்த கோவளம் இ.சி.ஆர்., சந்திப்பு சாலை அருகே, ஏரோடான் என்ற தனியார் நிறுவனம் சார்பில், ஹெலிகாப்டர் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஜன.,10ம் தேதி ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை துவக்கப்பட்டது. அப்போது சில சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது.


இதனையடுத்து 'ரோடான் சாப்பர் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து மீண்டும் கடந்த 12ம் தேதி தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.
இந்த ஹெலிகாப்டரில், 6 பேர் மட்டுமே பயணிக்க முடியும். 5 நிமிட பயணத்திற்கு ஒரு நபருக்கு, 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வசதிகள்



ஒரு நாளைக்கு 50 சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பயணியரை ஏற்றிச் சென்று கோவளம், திருவிடந்தை, கேளம்பாக்கம், முட்டுக்காடு கடற்கரை பகுதி என, 20 கி.மீ., வரை சுற்றி காட்டப்படுகிறது. ஹெலிகாப்டர் 1,000 மீட்டர் உயரம் வரை பறக்கிறது. அதேபோல், ஹெலிகாப்டர் மையத்தில் திறந்த வெளி திருமண அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் மணமக்கள் வந்திறங்கி, விழா மேடைக்குச் சென்று திருமணம் செய்துகொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மனு



இந்நிலையில், ஏரோடாம் நிறுவனத்தின் சிஇஓ நிஷா தமிழக சபாநாயகர் அப்பாவுவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் '' மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று ஹெலிகாப்டர் சுற்றுலாவை நடத்தி வருகிறோம். அதனை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ பாலாஜி தங்களிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கிறார்'' எனத் தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல்



இதன் பிறகு அவர் கூறியதாவது: எம்எல்ஏ பாலாஜி நிறைய பிரச்னை கொடுக்கிறார். அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். டிஜிசிஏ விதிமுறைகளின்படி எங்களின் ஹெலிபேட் அமைக்கப்பட்டு உள்ளது. சிவில் ஏவியேஷன் அமைச்சகத்தின் விதிமுறைப்படி அனைத்தும் நடக்கிறது. கலெக்டர், கமிஷனருக்கு தகவல் தெரிவத்துவிட்டு சேவையை துவக்கலாம் என்ற விதிமுறையை முறையாக கடைபிடிக்கிறோம். ஆனால், பாலாஜி அச்சுறுத்தல் விடுக்கிறார். அவர் லஞ்சம் கேட்டார். அதனை கொடுக்கவில்லை. அதனால், '' நீங்கள் மட்டும் பணம் சம்பாதிக்கிறீர்கள். தனியார் நிறுவனம் மட்டும் சம்பாதிப்பதாக'' கூறுகிறார். இதனால் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம். கூப்பிட்டு சொல்வதாக தெரிவித்துள்ளார்.

குடைச்சல்



கடந்த ஆண்டு பொங்கல் விழாவின் போது எங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பாலாஜியை நேரில் அழைத்தார். 'லஞ்சம் கொடுக்க வேண்டும். எங்களை கவனிக்க வேண்டும்' என பாலாஜி கேட்டார். அதற்கு விதிமுறைகளின்படி தான் செயல்படுகிறோம் என தெரிவித்தோம். அப்போது முதல் பிரச்னை செய்கின்றனர். குடைச்சல் கொடுத்தனர். உள்ளே ஆட்கள் இருக்கும்போது வந்து பூட்டினர். நிறைய பிரச்னை செய்தும் அதனை எதிர்கொண்டோம். எந்த அறிவிப்பும் இல்லாமல் உள்ளூர் அதிகாரிகள் வந்து அலுவலகத்தை பூட்டினர். அதனையும் எதிர்கொண்டோம்.

தற்போது மீண்டும் ஆரம்பித்தபோது மீண்டும் வருகின்றனர். சட்டப்படி அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்தோம். எல்லா அனுமதிகளையும் வாங்கி துவக்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் அச்சம்



இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எம்எல்ஏ பாலாஜி கூறியதாவது: ஹெலிகாப்டரை கண்டு மக்கள் அஞ்சுகின்றனர். ஹெலிகாப்டரை பைலட் லைசென்ஸ் சரியாக உள்ளதா என தெரியவில்லை. ஹெலிகாப்டர் எந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டது என தெரியவில்லை. மக்கள் பாதுகாப்புகாக கேட்டால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் குற்றம்சாட்டுகின்றனர் எனத் தெரிவித்தார்.

Advertisement