15 மாவோயிஸ்ட்கள் ஜார்க்கண்டில் சுட்டு்க்கொலை

சாய்பாசா: ஜார்க்கண்ட் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த, மாவோயிஸ்ட் தலைவர் அனல்டா உட்பட 15 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரன்டா வனப்பகுதியில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் அனல்டா உள்ளிட்டோர் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த 20ம் தேதி முதல், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா பிரிவினர் 1,500 பேர், சரன்டா வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை கும்டி பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள், திடீரென துப்பாக்கியால் போலீசார் மீது சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 15 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில், கிரிதி மாவட்டத்தின் பிர்டன்ட் பகுதியை சேர்ந்த, சி.பி.ஐ., மாவோயிஸ்ட் இயக்க மத்திய குழு உறுப்பினர் அனல்டா உட்பட 15 பேர் சடலங்கள் மீட்கப்பட்டன.

உயிரிழந்த அனல்டா, 1987 முதல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தார். பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதை அடுத்து, அவரை பிடித்து கொடுத்தால் 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுட்டுக்கொல்லப்பட்டதாக ஐ.ஜி., மிக்கேல் ராஜ் தெரிவித்தார்.

மேலும் ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்களின் கோட்டைகளாக கருதப்பட்ட, கோல்ஹன் மற்றும் சரன்டா பகுதிகளில் அவர்களின் நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement