'ஜி ராம் ஜி' திட்டத்தை விமர்சித்த ராகுலுக்கு பா.ஜ., பதிலடி! ராமர் பெயரை கேட்டாலே அஞ்சுவதாக விமர்சனம்

3

புதுடில்லி: 'விக்சித் பாரத் - ஜி ராம் ஜி திட்டம் வெற்று முழக்கம், விளிம்புநிலை மக்கள் மீதான தாக்குதல்' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்த நிலையில், 'ராம் என்ற பெயரை கேட்டாலே அவர் நடுங்குகிறார்' என, பா.ஜ., விமர்சித்துள்ளது.


'அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை ஒரு முறை கூட செல்லாமல், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியவர். ஹிந்து விரோத, சனாதன விரோத மனப்பான்மை கொண்டவர்' என, கடுமையாக சாடியுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையில், ஐ.மு., கூட் டணி ஆட்சியில் இருந்த போது, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி நுாறு நாட்கள் வேலை வழங்கப்பட்டது.


கடந்த குளிர்கால கூட்டத் தொடரின் போது, இந்த திட்டத்தின் பெயரை மத்திய அரசு, 'விக்சித் பாரத் - ஜி ராம் - ஜி' என மாற்றி அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. தவிர, வேலை நாட்களையும் 125 நாட்களாக உயர்த்தியது.



இந்நிலையில், திட்டத்தின் பெயரை மாற்றி யதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட மாநாடு டில்லி யில் நேற்று நடந்தது.


இதில் பங்கேற்று பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல், ''மத்திய அரசின் 'விக்சித் பாரத் - ஜி ராம் - ஜி' திட்டம் வெற்று முழக்கம். விளிம்பு நிலை மக்கள் மீதான தாக்குதல்.


''ஏழை மக்களுக்கு உரிமைகள் வழங்கவே நுாறு நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதனை பிரதமர் மோடி சீர்குலைக்க பார்க்கிறார்,'' என விமர்சித்திருந்தார்.


டில்லியில் நடந்த இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சி எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ராகுலின் இந்த குற்றச்சாட்டுக்கு பா.ஜ., பதிலடி தந்துள்ளது.


இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டி இரு ஆண்டு கள் கடந்து விட்டன. ஆனால், ராகுல் குடும்பம் அயோத்தி ராமர் கோவிலுக்கு இன்று வரை செல்லவில்லை. ராகுல் அயோத்தி வருகை குறித்து வேண்டுமென்றே உறுதி செய்யாததால், பார்லி., குழுவின் வருகை கூட நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது.


அந்த அளவுக்கு ஹிந்து நம்பிக்கை மற்றும் கலாசாரங்களில் இருந்து ராகுல் விலகியே இருக்கிறார். ஹிந்து விரோத, சனாதன விரோதியாக இருப்பதால் தான், 'விக்சித் பாரத் - ஜி ராம் - ஜி' திட்டத்தை அவர் எதிர்க்கிறார். ராமர் கோவில் தொடர்பாகவும், ஹிந்து மதம் தொடர்பாகவும் நடக்கும் நிகழ்வுகளை அவர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement