இங்கிலாந்திடம் வீழ்ந்தது ஆஸி., * யூத் உலக கோப்பை அரையிறுதியில்

புலவாயோ: யூத் உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது இங்கிலாந்து. அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 27 ரன்னில் வீழ்த்தியது.
ஜிம்பாப்வே, நமீபியாவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் நடக்கிறது. நேற்று புலவாயோவில் நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தாமஸ் சதம்
இங்கிலாந்து அணிக்கு பென் டாகின்ஸ் (1), ஜோசப் மூரெஸ் (25) ஜோடி துவக்கம் தந்தது. பென் மேயஸ் 24 ரன் எடுத்தார். பின் இணைந்த விக்கெட் கீப்பர், கேப்டன் தாமஸ் ரியு, பல்கானர் (40) ஜோடி 4வது விக்கெட்டுக்கு 135 ரன் சேர்த்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தாமஸ் (110) சதம் அடித்து அவுட்டானார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 277/7 ரன் எடுத்தது. பர்கான் (28) அவுட்டாகாமல் இருந்தார்.
ஆலிவர் போராட்டம்
ஆஸ்திரேலிய அணிக்கு வில் மலாஜ்சக் (15), நிதேஷ் சாமுவேல் (47) ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆர்யன் சர்மா 34 ரன் எடுத்தார். ஒரு கட்டத்தில் 180/5 ரன் என இருந்த ஆஸ்திரேலியா, 207/8 என திணறியது. கேப்டன் ஆலிவர் அரைசதம் அடித்தார். லம்ஸ்டென் வீசிய 46வது ஓவரில் ஆலிவர் 22 ரன் (6, 4, 4, 4, 4) எடுக்க, வெற்றியை நெருங்கியது ஆஸ்திரேலியா. கடைசியில் சதம் அடித்த ஆலிவர் (88 பந்து, 100 ரன்) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 250 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.

இந்தியா-ஆப்கன் பலப்பரீட்சை
ஹராரேயில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் 'பி' பிரிவில் முதலிடம் பெற்ற இந்திய அணி, 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. 19 வயது உலக கோப்பை தொடரில் ஐந்து முறை சாம்பியன் ஆன அணி இந்தியா (2000, 2008, 2012, 2018, 2022). தற்போது தொடர்ந்து 6, ஒட்டுமொத்தமாக 12 வது முறையாக அரையிறுதியில் பங்கேற்க உள்ளது.
இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே, வைபவ், விஹான், 'ஆல் ரவுண்டர்' தமிழகத்தின் அம்ப்ரிஸ், தீபேஷ், ஹெனில் படேல் கைகொடுத்தால், 10 வது முறையாக பைனலுக்கு செல்லலாம்.

Advertisement