'ஏர் இந்தியா' விமானத்தில் மீண்டும் கோளாறு; 'போயிங் 787' ரக விமானங்களில் சோதனை
புதுடில்லி: 'ஏர் இந்தியா' நிறுவனத்தின், 'போயிங் 787 ட்ரீம்லைனர்' ரக விமானத்தில், இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த வகை விமானங்களை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு, கடந்த ஆண்டு ஜூன் 12ல் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது.
இதில், 260 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்துக்கு, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் கோளாறு முக்கிய காரணமாக கண்டறியப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
அதிர்ச்சி
இதேபோன்ற சம்பவம், ஏர் இந்தியா நிறுவனத்தின் அதே ரக விமானத்தில் மீண்டும் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், கர்நாடகாவின் பெங்களூரில் நேற்று முன்தினம் தரையிறங்கியது.
இதைத்தொடர்ந்து, மீண்டும் அந்த விமானத்தை இயக்க முயன்ற விமானி ஒருவர், அதன் இடதுபக்க எரிபொருள் சுவிட்ச், 'ரன்' நிலையில் நிற்காமல், 'கட் - ஆப்' நிலைக்கு சென்றதை கவனித்தார்.
இது, விமானத்தின் இன்ஜினுக்கு எரிபொருள் செல்வதை தடுக்கும் என்பதால், உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விமானத்தை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன தொழில்நுட்பக்குழு மற்றும் டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகளும் அந்த விமானத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மறு ஆய்வு
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தன் வசம் உள்ள போயிங் 787 ட்ரீம்லைனர் ரக அனைத்து விமானங்களில் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியாவின் விமான இயக்கப்பிரிவின் மூத்த துணைத்தலைவர் மணீஷ் உப்பல் வெளியிட்ட அறிக்கையில், 'போயிங் 787 ரக விமானங்களில் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை விமான குழுமம் முழுதும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தை முன்னுரிமை அடிப்படையில் மதிப்பீடு செய்ய, ஏர் இந்தியாவின் பொறியாளர் குழு, போயிங் நிறுவனத்திடம் கொண்டு சென்றுள்ளது. இவ்வகை விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் இயல்பான செயல்பாடுகளை முன்னெச்சரிக்கையுடன் மறு ஆய்வு செய்ய துவங்கியுள்ளோம்' என, குறிப்பிட்டுள்ளார்.
தற்போது,ஏர் இந்தியாவிடம் 33 போயிங் 787 விமானங்கள் உள்ளன. இவ்வகை விமானங்களை
இயக்கும் முன், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உடனே புகார் அளிக்கும்படி தன் விமானிகளுக்கு ஏர் இந்தியா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
@block_B@ திருப்திகரமாக உள்ளது: டி.ஜி.சி.ஏ., எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் தொடர்பாக புகார் எழுந்த நிலையில், அனைத்து போயிங் விமானங்களிலும் ஏர் இந்தியா நிர்வாகம் பரிசோதனை நடத்தியது. இதன் முடிவில், அனைத்தும் திருப்திகரமாக இருப்பதாக டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: போயிங் நிறுவன உதவியுடன் ஏர் இந்தியா நிர்வாகம் சம்பந்தப்பட்ட விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில், அனைத்து செயல்முறைகளும் திருப்திகரமாக இருந்தது. எனினும், அழுத்தம் மற்றும் திசை தொடர்பாக அந்த சுவிட்சுகளை கையாளும் முறை தவறாக இருந்ததால், அது தவறான திசையில் நகர்ந்ததை ஏர் இந்தியா கண்டறிந்தது. எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் செயல்பாடு குறித்து, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ பற்றி, போயிங் பரிந்துரைத்த நடைமுறைகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இது, தவறானது என கண்டறியப்பட்டுள்ளது. விமானம் இயங்க முக்கிய தேவையாக உள்ள இந்த சுவிட்சுகளை இயக்குவது குறித்து, போயிங் நிறுவனம் பரிந்துரைத்த நடைமுறையை, ஏர் இந்தியா நிர்வாகம் தன் பணியாளர்களுக்கு விரிவாக விளக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.block_B
அது என்ன ஏர் இந்தியா விமான சுவிட்சுகளில் மட்டும் கோளாறு வருது?மேலும்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்
-
அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி; வெள்ளை மாளிகை தகவல்