ரூ.36.56 கோடியில் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஜி.ஆர்.பி., நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 73 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சக்கரபாணி, வகுப்பறைகளை திறந்து வைத்தார். மூக்கண்டப்பள்ளியில் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையை திறந்து வைத்து, கணக்கு துவங்கிய வாடிக்கையாளர்களுக்கு பாஸ்புக் உள்ளிட்டவற்றை வழங்கினார்.


ஓசூர் மாநகராட்சியில், வளர்ச்சி நிதியிலிருந்து, 31.97 கோடி ரூபாய் மதிப்பில், 502 எண்ணிக்கையில் தார்ச்சாலை மற்றும் சிமென்ட் சாலை பணிகளை, அமைச்சர் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்.,ல், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.01 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை, சிமென்ட் சாலை பணிகளை துவக்கி வைத்து, 1,107 ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கினார். மேலுார் முதல் தொழுவபெட்டா வரையும், அங்கிருந்து குல்லட்டி கிராமத்திற்கும், 2.85 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.


தியானதுர்க்கத்தில், 156 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய அமைச்சர் சக்கரபாணி, வேப்பனஹள்ளி அடுத்த பெரியதக்கேப்பள்ளியில், புதிய ரேஷன்கடையை திறந்து வைத்தார். தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், மண்டல தலைவர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement