கறிக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து

மதுரவாயல்: போலீசிடம் காட்டிக் கொடுத்ததாக நினைத்து, கறிக்கடை ஊழியரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் அஸ்லாம், 38. இவர், மேட்டுக்குப்பம் பிரதான சாலையில் உள்ள இறைச்சி கடையில் கறி வெட்டும் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அஸ்லாம் கடையின் அருகே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 38, என்பவர், அஸ்லாமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கத்தியால் குத்தி தப்பிச் சென்றார்.

இதில் ரத்தக்காயம் அடைந்த அஸ்லாமை அங்கிருந்தோர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்த புகாரை அடுத்து, மதுரவாயல் போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரித்தனர்.

இதில், தைப்பூசத்திற்கு முந்தைய நாளான ஜன., 31ம் தேதி 'டாஸ்மாக்' கடையில் இருந்து அதிக அளவில், மது பாட்டில்களை கார்த்திக் வாங்கிச் சென்றார். அப்போது, அஸ்லாம் பார்த்துள்ளார்.

இந்நிலையில், மதுரவாயல் போலீசார் கார்த்திக்கை பிடித்து விசாரித்து, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தன்னை போலீசிடம் காட்டிக் கொடுத்தது அஸ்லாம் தான் என நினைத்து அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது.

Advertisement