பட்ஜெட்டில் ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு 8.5 மடங்கு அதிகரித்துவிட்டது; ஸ்டாலினுக்கு மத்திய அரசு பதில்

38

நமது நிருபர்



''2014ம் ஆண்டிலிருந்து தமிழகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27ம் ஆண்டில் ரூ.7,611 கோடியாக உயர்ந்துள்ளது'' என ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு முழுமையான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார். இதற்கு விளக்கம் அளித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. 2014ம் ஆண்டிலிருந்து தமிழகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27ம் ஆண்டில் ரூ.7,611 கோடியாக உயர்ந்து உள்ளது.

* 2014ம் ஆண்டுக்கு முன்பிருந்த காலத்தை விட, தற்போது தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் 2 புதிய புல்லட் ரயில் தொடங்கப்பட உள்ளது. சென்னை- பெங்களூரு, சென்னை- ஹைதராபாத் ஆகிய இரண்டு வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

* புல்லட் ரயில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, சென்னையில் இருந்து பெங்களூரு ஒரு மணி நேரம் 30 நிமிடத்தில் செல்ல முடியும். சென்னை- ஹைதராபாத்திற்கு 2 மணி நேரம் 55 நிமிடத்தில் செல்ல முடியும்.

* தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக தேவைப்படும் நிலம் 4,326 ஹெக்டேர். ஆனால் கையகப்படுத்தப்பட்டது வெறும் 1,052 ஹெக்டேர் (24%) மட்டுமே. அதே நேரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்காகத் தமிழக அரசிடம் ஏற்கனவே ரூ.1,465 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது.

* தமிழகத்தில் 97% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளன; அதில் 18 நிலையங்களில் பணிகள் முடிந்துவிட்டன. தமிழகத்தில் தற்போது 9 ஜோடி வந்தே பாரத் மற்றும் 9 ஜோடி அமிர்த் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

* தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு எந்தக் குறையும் வைக்கவில்லை. தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்காததே ரயில்வே திட்டங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு காரணமாகும்.

* மதுரை- தூத்துக்குடி ரயில்வே திட்டத்திற்கு 91 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணி முடியவில்லை.

* திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை ரயில் திட்டத்திற்கு 86 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. ராமேஸ்வரம்- தனுஷ்கோடி திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை.

* ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் பணி நிலுவையில் இருப்பதால் பல முக்கிய திட்டங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Advertisement