டில்லியில் ஏ.ஐ., உச்சி மாநாடு; ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் கிடுகிடு உயர்வு

1

புதுடில்லி: டில்லியில், வரும் 16ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடக்கவிருக்கும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உச்சி மாநாடு 2026 நடக்க இருப்பதை முன்னிட்டு ஆடம்பர ஹோட்டல்களில், கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



வரும் 16ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை, டில்லியில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில், இதுவரை, 35 ஆயிரம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 நாடுகளின் அமைச்சர்கள், 15 - 20 அரசுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

35 ஆயிரம் பேர்

அந்த வகையில், உலகம் மற்றும் இந்தியாவின் சிறந்த, 40 ஏ.ஐ., தொழில்நுட்ப வல்லுநர்கள், 500 வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

அவர்களுடன் வருபவர்கள் என, மொத்தம், 35 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதனால், 'தலைநகர் டில்லியில் இப்போதே ஹோட்டல் கட்டணங்கள் விண்ணைத் தொடத் துவங்கியுள்ளன' என, 'இக்சிகோ' என்ற டிராவல் இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி அலோக் பாஜ்பாய் கூறினார்.
ஒரு இரவு தங்க, இந்த ஹோட்டல்களில், 20 - 40 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய டில்லியில் உள்ள ஹோட்டல்களில் ஒரு நாள் இரவு தங்குவதற்கான கட்டணம், 4 - 5 லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும், ஹோட்டல்களில் அறைகள் கிடைக்காமல், பலரும் அல்லாடி வருகின்றனர்.

தட்டுப்பாடு





முக்கியமான ஹோட்டல்களான தி லீலா பேலஸ், ஐ.டி.சி., மவுர்யா, தாஜ் பேலஸ் ஆகியவற்றில், அறைகள் இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

அதிலும், மத்திய டில்லி பகுதியில் உள்ள ஹோட்டல்களான தி இம்பீரியல், சங்ரி லா எராஸ், தி பார்க் ஹோட்டல் போன்றவற்றில் அறைகளே இல்லை என்ற நிலை காணப்படுகிறது.

Advertisement