சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: கிரண் ரிஜிஜூ திடுக்கிடும் தகவல்

13


புதுடில்லி: '' காங்கிரஸ் எம்பிக்கள் 25க்கும் மேற்பட்டோர், அவரது அறைக்குள் நுழைந்து சபாநாயகரை வசைபாடினர்,'' என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.


லோக்சபாவில் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி பேச காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளி காரணமாக காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இதனிடையே, லோக்சபாவில் பிரதமர் மோடி இருக்கையை காங்கிரஸ் எம்பிக்கள் சூழ்ந்த வீடியோ காட்சிகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிருபர்களிடம் கூறியதாவது: சபாநாயகர் அறைக்குள் 20 முதல் 25 எம்பிக்கள் நுழைந்ததுடன் அவரை வசை பாடினர். நானும் அங்கு இருந்தேன். சபாநாயகர் மென்மையான மனிதர். வேறு யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். பிரியங்கா, கேசி வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் மூத்த எம்பிக்கள் அவர்களை ஊக்குவித்தனர்.


சபாநாயகர் அறைக்குள் நுழைந்து அவரை விமர்சித்ததுடன், மோசமான விஷயங்களை கூறினர். சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை அவர்கள் பின்பற்ற மறுத்துவிட்டனர். 'நான் பேசுவதற்கு யாரின் அனுமதியில்லை' என ராகுல் கூறினார். எந்த விதிமுறைகளையும் மீறி, தனது விருப்பப்படி பேசுவேன் என்கிறார். அவையில் சபாநாயகர் அனுமதி அளிக்காவிட்டால் யாரும் பேச முடியாது. பிரதமர் கூட சபாநாயகரின் அனுமதி பெற்றுத் தான் பேச வேண்டும். அனுமதி வாங்கித்தான் அனைவரும் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement