மும்பையின் புதிய மேயராக தேர்வானார் ரிது தாவ்டே; பாஜவினர் கொண்டாட்டம்

மும்பை: மும்பையின் புதிய மேயராக பாஜவின் ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை மேயராக சிவசேனாவின் சஞ்சய் காடி தேர்வாகி இருக்கிறார்.

அண்மையில் மும்பை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜ பெருவாரியாக வெற்றி பெற்றது. இதையடுத்து, மிக பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் மும்பையின் அடுத்த மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது. மேயர் பதவிக்கு ரிது தாவ்டே என்பவரை பாஜ வேட்பாளராக அறிவித்தது. துணை மேயர் பதவிக்கு சிவசேனாவின் சஞ்சய் காடி போட்டியிட்டார்.

இந் நிலையில், ரிது தாவ்டே மும்பையின் புதிய மேயராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். துணை மேயராக சஞ்சய் காடியும் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். ரிது தாவ்டே மேயரானது மூலம், மும்பை மாநகராட்சியில் தாக்கரே குடும்பத்தினரின் 25 ஆண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. மேயராக ரிது தாவ்டே தேர்ந்து எடுக்கப்பட்டதை பாஜவினர் கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறுகையில், '' மும்பை மேயராக ரிது தாவ்டேவும், துணை மேயராக சஞ்சய் காடியும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துகள். நாங்கள் ஒற்றுமையாக உழைப்போம், மும்பையை வளப்படுத்துவோம்" என்றார்.

நாட்டின் பணக்கார உள்ளாட்சி அமைப்பு என்று வர்ணிக்கப்படும் மும்பை மாநகராட்சியின் 2025-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.24,450 கோடியாகும். இது சில சிறிய மாநிலங்களின் பட்ஜெட் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement