தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 31 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்; சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

4


சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 31 அறியவகை உயிரினங்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.


தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, பயணியர் விமானம் ஒன்று நேற்று இரவு சென்னை வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சந்தேகப்படும்படி வந்த, சென்னையை சேர்ந்த 30 வயது ஆண் பயணியின் உடைமைகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.


அதில், ஆப்பிரிக்கா மற்றும் சகாரா பாலைவனம் பகுதிகளில் காணப்படும் ஆமைகள் - 9, அறியவகை பல்லிகள் - 4, வாட்டர் டிராகன் எனப்படும் பல்லி - 1, ராயல் பைத்தான் பாம்புகள் - 12, அரியவகை உடும்பு - 3, வெள்ளை நாக பாம்பு - 1 என, 31 அறியவகை உயிரினங்கள் உயிருடன் இருந்தன.


இவை, மிகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் வருகிறது. இவற்றை இந்தியாவிற்குள் கொண்டு வர முறையாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். பிடிபட்ட நபர் உரிமம் இல்லாமல் கடத்தி வந்துள்ளார்.

பாதுகாப்பு கருதி, கொண்டு வந்த விமானத்திலேயே அந்நாட்டுக்கு, உயிரினங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு கடத்தியதாக, பிடிபட்ட நபர், சுங்கத்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்ததாக அதிகாரிகள் கூறினர்.


இது குறித்து, அவர்கள் கூறியதாவது: சென்னையில் இருந்து சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்ற நபர், அங்குள்ள வன உயிரினங்களை கடத்தும் கும்பலிடம் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர், முதல் முறையாக தாய்லாந்து சென்று திரும்பி உள்ளார். எலக்ட்ரானிக்ஸ் சாதனத்திற்குள் மறைத்து, அரிய உயிரனங்களை கடத்தி வந்தார்.


தமிழகத்தில் வாஸ்து மற்றும் அதிர்ஷ்டத்திற்கானது எனக்கூறி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று நண்பர்கள் சொன்னதால், கடத்தி வந்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் மற்றும் பிற மாநில நபர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement