வங்கதேச தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: ஷேக் ஹசீனா
டாகா: முகமது யூனுஸ் நடத்திய மோசடியான வங்கதேச பொதுத்தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
வங்கதேச தேர்தல் இன்று நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வாக்காளர்கள் இல்லாத, சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான தேர்தலை ரத்து செய்யணும். முகமது யூனுஸ் பதவி விலகுவதுடன், பொய்யான வழக்குகளை திரும்ப பெற்று, ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கைதிகளை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
அவாமி லீக் கட்சியின் செயல்பாட்டுக்கான தடையை நீக்குவதுடன்,
நடுநிலையான அரசின் மேற்பார்வையின் கீழ், நேர்மையான, சுதந்திரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொதுத்தேர்தல் மூலம் மக்களின் ஓட்டுரிமையை உறுதி செய்ய வேண்டும்.
முகமது யூனுஸ் நடத்திய மோசடி நடவடிக்கையை புறக்கணித்த தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலமைப்பு மற்றும் சட்டவிரோதமாக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட முகமது யூனுஸ் நடத்திய தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டது.
மக்களின் ஓட்டுரிமை, ஜனநாயக மாண்புகள் மற்றும் அரசியலமைப்பின் ஆன்மாவை தேர்தல் கமிஷன் மதிக்கவில்லை. அவாமி லீக் மற்றும் வாக்காளர்கள் இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.