ரயிலில் இருந்து விழுந்த மும்பை நபர் பலி; காப்பாற்ற முயன்ற மனைவியும் இறந்த சோகம்

காட்பாடி: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த, மும்பை ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் ரயிலில் சிக்கி இறந்தார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

கள்ளக்குறிச்சி மாவட்டம், அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன், 37. இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சிவகண்டன், ஹோட்டல் நடத்தி வந்தார். சிவகண்டனின் பாட்டி இறந்ததால், இறுதி சடங்குகளுக்கான காரியம், திருக்கோவிலுாரில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள, மும்பையிலிருந்து திருநெல்வேலி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருவரும் வந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்த போது, சிவகண்டன் கதவை திறந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்த அவரது மனைவி கலையரசி கணவனை காப்பாற்ற முயன்றார். இருவரும் உயிரிழந்தனர். இதை பார்த்த சக பயணியர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

அந்த பகுதி மக்கள் களம்பூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த காட்பாடி ரயில்வே போலீசார் சிவகண்டன், கலையரசி உடல்களை பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement