கிருமிநாசினி ஸ்பிரேயர் வேலை செய்யவில்லை; கோணிப்பைகளை பயன்படுத்தி 'புது டெக்னிக்' கால்நடை துறை 'அசத்தல்'
கும்மிடிப்பூண்டி: மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், கால்நடை துறையின் பறவை காய்ச்சல் தடுப்பு முகாமில், கிருமிநாசினி ஸ்பிரேயர் வேலை செய்யாததால், வாகனங்கள் செல்லும் வழித்தடத்தில், கிருமிநாசினியில் நனைத்த கோணிப்பபைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து, கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை, கால்நடை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நோய் பரவல் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், கடந்த 9ம் தேதி முதல் கால்நடை துறையினர் முகாமிட்டுள்ளனர்.
உதவி கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் என, மூன்று பேர் சுழற்சி முறையில், 24 மணி நேரமும் நோய் பரவல் தடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வெளி மாநிலங்களில் இருந்து, கோழி, வாத்து, அதன் முட்டைகள் மற்றும் தீவனங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு, தமிழகத்திற்குள் செல்ல அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மற்ற வாகனங்களின் மீது கிருமிநாசினி தெளித்த பின் தமிழகத்திற்கு அனுமதிக்கின்றனர்.
மேற்கண்ட எளாவூர் சோதனைச்சாவடியில், கிருமிநாசினி தெளிக்கும் ஸ்பிரேயர் இயந்திரம் பழுதானதால், அதிலிருந்து கிருமிநாசினி தெளிக்க முடியாமல் போனது.
இதையடுத்து, வாகனங்கள் செல்லும் வழித்தடத்தில், கிருமிநாசினியில் நனைத்த நான்கு கோணிப்பைகளை போட்டு வைத்துள்ளனர். அதன் மீது செல்லும் வாகனங்களின் டயர்களில் கிருமிநாசினி படுவதால், பறவை காய்ச்சல் நோய் கிருமி பரவாமல் தடுக்கப்படும் என, கால்நடை துறையினர் நம்புகின்றனர்.
கோரிக்கை ஆந்திரா, ஒடிஷா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீஹார், உத்தர பிரதேசம் என, ஏராளமான வடமாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கும் முக்கிய சோதனைச்சாவடிக்கு ஏற்பட்ட சோதனையாக, சமூக ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.
மேலும் ஒரு வழித்தடத்தில் மட்டுமே கிருமிநாசினி கோணிப்பைகள் போடப்பட்டிருப்பதால், கனரக வாகனங்கள் செல்லும் மற்றொரு வழித்தடத்தை தவற விட்டுள்ளனர். பறவை காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை, கால்நடை துறையினர் முறையாக மேற்கொள்ளாமல், கடமைக்கு செய்து வருகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு இம்முகாம் நடைபெறும் எனக் கூறப்படுவதால், இனி வரும் நாட்களில், மேற்கண்ட முகாமை முறையாக செயல்படுத்த கால்நடை துறை முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஜனநாயக ரீதியிலான வங்கதேசத்திற்கு எப்போதும் இந்தியா ஆதரவு; பிரதமர் மோடி
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.3,120 சரிவு
-
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை... இஸ்ரேலுக்கு தீராத சந்தேகம்
-
வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு
-
பாகிஸ்தானை திணறடித்த எஸ்-400 ஏவுகணைகள்; ரூ.10 ஆயிரம் கோடிக்கு வாங்கும் இந்தியா
-
ஏர் இந்தியா விமான விபத்து; இத்தாலி அறிக்கையை மறுத்தது விசாரணை ஆணையம்