நல்வழிப்பாதையில் நக்சலைட்டுகள்
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள சௌகல் கிராமத்தில் அமைந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் வளாகத்திற்குள் இன்று ஓர் அமைதியான வாழ்வாதாரப் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது போர்க்களப் புரட்சி அல்ல; ஒரு புதிய விடியலுக்கான புரட்சி.
ஒரு காலத்தில் கையில் துப்பாக்கி ஏந்தி காடுகளில் மறைந்து வாழ்ந்த நக்சலைட்டுகள் பலர், இன்று வன்முறைப் பாதையைத் துறந்து தையல் இயந்திரங்களையும் தொழில் கருவிகளையும் ஏந்தித் தங்கள் வாழ்க்கையைச் செதுக்கி வருகின்றனர். மாவோயிஸ்ட் சித்தாந்தத்தைப் பின்பற்றும் இவர்களுக்கு, 1967-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி கிராமத்தில் தொடங்கிய கிளர்ச்சியின் காரணமாகவே "நக்சலைட்டுகள்" என்ற பெயர் உருவானது.
பழங்குடியின மக்களின் நில உரிமைப் பிரச்சினைகள், போதிய வளர்ச்சி இன்மை மற்றும் அடிப்படை வசதிகள் சென்றடையாத ஏழ்மை நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அமைப்புகள், "தீர்வு துப்பாக்கி முனையில் தான் இருக்கிறது" என்ற தவறான பிரச்சாரத்தைச் செய்து இளைஞர்களை வழிதவறச் செய்கின்றன.
இந்தியாவில் "சிவப்பு தாழ்வாரம்" என்று அழைக்கப்படும் பகுதிகளில் இவர்களின் நடமாட்டம் தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. இருப்பினும், சத்தீஸ்கரின் பஸ்தர், தந்தேவாடா, கான்கேர் போன்ற மாவட்டங்களில் இவர்கள் இன்றும் சவாலாக உள்ளனர். ஜனநாயகத்தில் நம்பிக்கையற்ற இவர்கள், ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இவர்களது துப்பாக்கி கலாச்சாரத்திற்குப் பாதுகாப்புப் படைகள் மூலம் அரசு பதிலடி கொடுத்தாலும், மறுபுறம் அவர்கள் திருந்தி வாழ்வதற்குப் பல்வேறு நல்வாய்ப்புகளையும் அரசு வழங்கி வருகின்றது. ஆயுதங்களுடன் சரணடைபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதுடன், சுயதொழில் புரியத் தையல், கணினி மற்றும் விவசாயப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
மேலும், அவர்கள் உருவாக்கும் கைவினைப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும், அவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் விடுதி வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அரசு முன்னுரிமை அளிக்கிறது. திருந்திய இவர்கள் மீது காடுகளில் இருக்கும் மற்ற நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பாதுகாப்பு கருதியே எல்லைப் பாதுகாப்புப் படை முகாமிற்குள்ளேயே இவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இவர்களின் இந்த அமைதியான முன்னேற்றத்தைக் காணும் மற்ற நக்சலைட்டுகளும் காலப்போக்கில் வன்முறையைக் கைவிட்டுத் தேசிய நீரோட்டத்தில் இணைய முன்வருவார்கள் என்பது திண்ணம். காடுகளுக்குள் குற்றவாளிகளாக மடிவதை விட, கண்ணியமான முறையில் உழைத்து வாழ்வதே சிறந்தது என்பதை உணர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய கைகளில் இன்று தையல் இயந்திரங்கள் இயங்குவதும், ரத்தக் கறையை விட வியர்வைச் சிந்தி உழைப்பதில் உள்ள நிம்மதியை இந்த மனிதர்கள் உணர்வதும் மனிதாபிமானத்திற்குத் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். அடர்ந்த காடுகளுக்குள் வழிதவறிச் சென்றவர்களின் வாழ்க்கையில், இந்த மறுவாழ்வு மையம் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.
-எல்.முருகராஜ்
மேலும்
-
ஹிந்தியை கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது; வெங்கையா நாயுடு
-
தமிழகத்திற்கு புது டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,500 லஞ்சம்; விஏஓ கைது
-
மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்; சகவாழ்வின் முக்கியத்துவத்தை விவரித்த மோகன் பாகவத்
-
விஜய் மல்லையா நாடு திரும்ப வேண்டும்: மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
-
மீண்டும் பொய்யை பரப்புகிறார் ராகுல்; மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்