மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1

புதுடில்லி: டில்லி அருகே, நொய்டா 142வது செக்டார் முதல் பொட்டானிக்கல் கார்டன் வரை 11.56 கி.மீ., தூரத்துக்கு எட்டு நிலையங்களுடன் மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.





இது குறித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. டில்லி அருகே, நொய்டா 142வது செக்டார் முதல் பொட்டானிக்கல் கார்டன் வரை, 11.56 கி.மீ., தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்த பின், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களில் 61.62 கி.மீ., தூரத்துக்கு மெட்ரோ ரயில் வசதி கிடைக்கும்.



மேலும், நொய்டாவின் பல பகுதிகளில் இருந்து சொந்த வாகனத்தில் செல்வோர், பொது போக்குவரத்துக்கு மாறும் நிலையும் உருவாகும். பொட்டானிக்கல் கார்டனில் டில்லி மெட்ரோ ரயிலின் புளூ லைன் மற்றும் மெஜந்தா லைன் வழித்தடங்களுக்கு மாற முடியும். நொய்டாவின் முக்கிய மண்டலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் இணைக்கிறது.


பொட்டானிக்கல் கார்டன் மற்றும் 93வது செக்டார் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களையும் இந்த வழித்தடம் இணைக்கிறது. இந்த மெட்ரோ வழித்தட நீட்டிப்பால் வேலைவாய்ப்பு, வர்த்தகம், கல்வி, பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். நொய்டா மற்றும் டில்லியில் போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றுச்சூழல் மேம்படும்.


அதேபோல், குஜராத்தின் தமசியா - மோவி மற்றும் நாசர்பூர் - மலோதா இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளை ரூ.4,583.64 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தவும், தெலுங்கானாவின் குடேபெல்லூர் - மகபூப்நகர் இடையேயான 80 கி.மீ தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement