அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு; இந்தியாவுக்குக் கொண்டு வர ஏற்பாடு

22

வாஷிங்டன்: அமெரிக்காவில் காணாமல் போன 22 வயது இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


கர்நாடகாவைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீனிவாசையா, 22, சென்னை ஐ.ஐ.டி.,யில் கடந்த ஆண்டு பட்டம் பெற்றார். மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர், கலிபோர்னியா மாகாணத்தின் பெர்க்லி நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியாவில், வேதியியல் மற்றும் பயோ மாலிகுலர் பொறியியல் பிரிவில் முதுநிலைப் படிப்பு படித்து வந்தார்.



கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் சாகேத் ஸ்ரீனிவாசையாவை காணவில்லை. சக நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடினர். அவரது பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பை, பார்க் ஹில்ஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக, டுவைட் வேயின் 1700 பிளாக்கில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


இந்நிலையில் இன்று மாயமான இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா, பெர்க்லி ஹில்ஸ் அருகே உள்ள ஏரியில் சடலமாக உள்ளூர் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


''உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவது உட்பட, குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்'' என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement