அதிமுக சின்னம் குறித்த வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு டில்லி ஐகோர்ட் கேள்வி

புதுடில்லி: 'அதிமுகவின் கட்சி மற்றும் சின்னம் தொடர்பான விவகாரத்தில், ஆட்சேபித்து கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வளவு காலத்தில் முடிவெடுக்க முடியும்?'' என, தேர்தல் கமிஷனுக்கு என்று டில்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

'இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில், தேர்தல் கமிஷன் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என ஏற்கன்வே கோர்ட் உத்தவிட்டிருந்தது. ஆனால், அதை தேர்தல் கமிஷன் நிறைவேற்றவில்லை,'' எனக் கூறி, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் புகழேந்தி டில்லி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, தேர்தல் கமிஷன் பதிலளிக்க டில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. அது குறித்து பதில் அளித்த தேர்தல் கமிஷன், அதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு, கட்சி பெயர் மற்றும் கட்சிக் கொடி பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தில், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மனுக்களை முழுமையாக விசாரித்து வருகிறோம்,'' என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தாத்தா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ''அதிமுகவின் கட்சி மற்றும் சின்னம் தொடர்பான விவகாரத்தில், ஆட்சேபித்து கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வளவு காலத்தில் முடிவெடுக்க முடியும்?'' என, தேர்தல் கமிஷனுக்கு கேள்வி எழுப்பினார். கூடவே, தேர்தல் கமிஷன் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி பிப்., 23க்கு தள்ளி வைத்தார்.

Advertisement