தகவல் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

டில்லி சிறப்பு நிருபர்

தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம், 2023ல் அமல்படுத்தப்பட்டது. மக்களின் தனிநபர் டிஜிட்டல் தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து, 'தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்' என்ற அமைப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய பிரசாரக் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.


'டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு சட்டத்துக்காக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் சில பிரிவுகள் திருத்தப்பட்டன. பொது நலன் கருதி தனிநபர் தகவல்களை வழங்க, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழி இருந்தது. தற்போதைய திருத்தம் அத்தகைய தகவல்களை முழுமையாக தடை செய்கிறது.

'இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புலனாய்வு இதழியல் மற்றும் சமூக ஆர்வலர்களின் செயல்பாடுகளுக்கு இந்த சட்டம் முட்டுக்கட்டை போடுகிறது.
'அதனால், இந்த சட்டப் பிரிவுகள், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானவை' என, மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்க மறுத்த அமர்வு, மனுக்களை, பெரிய அமர்வுக்கு மாற்றுவது குறித்து அடுத்த மாதத்தில் விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Advertisement