இபிஎஸ்சை வீட்டில் சென்று சந்தித்த மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன்!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சை மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

சென்னையில் பசுமைவழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது, பிரதமர் மோடியின் தமிழக வருகை, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு, பிரசார வியூகங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

கோவையில் சிவராத்திரி விழாவின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றார். இந்த நிகழ்வில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்று, எஸ்.பி. வேலுமணியை சந்தித்து பேசினார்.

யாருடன் கூட்டணி என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேமுதிக இன்னமும் வெளியிடவில்லை. கூட்டணிக்கான நிலைப்பாடு குறித்தும் எவ்வித கருத்தையும் அறிவிக்கவில்லை. இப்படியான ஒரு தருணத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

எனவே, கூட்டணியை மேலும் வலுவாக்கும் நோக்கத்தில் தேமுதிகவை இணைப்பது குறித்து இபிஎஸ் உடன் இந்த சந்திப்பில் பேசப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் சந்திப்பு குறித்து தமது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள நயினார் நாகேந்திரன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement