சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம்: கிரண் ரிஜிஜூ

4


புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு மார்ச் 9 ல் நடக்கும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.



இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம் நடக்கும், விவாதத்திற்கு பிறகு ஓட்டெடுப்பு நடக்கும்.


தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி பரபரப்பாக இருக்கும்.அப்போது ஒரு மிக முக்கியமான மசோதா உட்பட சில மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளன.அவை என்ன மசோதா என்பது குறித்து நாங்கள் இப்போது வெளியிட மாட்டோம். இந்த மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.


விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை என்றால், அது அவர்களின் இழப்பாக இருக்கும்.பார்லிமென்ட்முடக்கப்படுவதை பெரும்பாலான கட்சிகள் விரும்பவில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் தங்கள் மாநில பிரச்னைகளை எழுப்ப விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜன.,28 ல் துவங்கி பிப்.,12 ல் முடிவடைந்தது. இரண்டாவது அமர்வு மார்ச் 8 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது. லோக்சபாவில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் , சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement