இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: 'இந்தியாவில், 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 1983ம் ஆண்டு, இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களால், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள, சொந்த மண்ணில் இருந்து வெளியேறிய இலங்கை தமிழர்களுக்கு, மத்திய அரசின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடன் தங்குமிடம், வாழ்வாதார உதவி, கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

தற்போது, 89,000 பேர் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். அவர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். அவர்களுக்கு குடியுரிமை அல்லது நீண்ட கால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள், தற்போது வரை கிடைக்கவில்லை. இதற்கு, பழைய நடைமுறை தடையாக உள்ளது. அதை நீக்க வேண்டும்.

மாவட்ட அளவில் உள்ள அலுவலகங்கள், குடியுரிமை மற்றும் நீண்ட கால விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும். கடந்த 2015 ஜனவரி 9ம் தேதி வரை, இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களை, 'சட்ட விரோதமாக குடியேறியவர்களாக கருதக்கூடாது' என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement