உலக விளையாட்டு செய்திகள்
இத்தாலி புதிய வரலாறு
மிலன்: இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வரும் இத்தாலி நட்சத்திரங்கள், இதுவரை 8 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் என, 22 பதக்கம் வென்றுள்ளனர். இது, குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் இத்தாலிக்கு கிடைத்த அதிகபட்ச பதக்கம். இதற்கு முன், 1994ல் நார்வேயின் லில்லிஹாமர் நகரில் நடந்த 17வது சீசனில், 7 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என, 20 பதக்கம் கைப்பற்றியது இத்தாலி.
ஆர்சனல் அணி அசத்தல்
லண்டன்: இங்கிலாந்தில், எப்.ஏ., கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் 4வது சுற்று போட்டியில் ஆர்சனல், விகன் அத்லெடிக் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த ஆர்சனல் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் புல்ஹாம் அணி 2-1 என, ஸ்டோக் சிட்டி அணியை வென்றது. பர்மிங்காம் சிட்டி அணி 2-4 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் லீட்ஸ் யுனைடெட் அணியிடம் தோல்வியடைந்தது.
எக்ஸ்டிராஸ்
* டில்லி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ், ஒற்றையர் தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 2-6, 2-6 என, தென் கொரியாவின் ஹியோன் சுங்கிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார் 6-3, 7-5 என, தென் கொரியாவின் உய்சுங் பார்க்கை வென்றார்.
* பெங்களூருவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா 6-2, 2-6, 1-6 என, ரஷ்யாவின் கிறிஸ்டினா சிடோரோவாவிடம் தோல்வியடைந்தார்.
* துருக்கியில் நடந்த நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட இந்திய ஆண்கள் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவின் ஸ்பார்டக் மாஸ்கோ எப்.சி., கிளப் அணியை வீழ்த்தியது.
* ஜெர்மனியில் நடந்த 'பிடே' பிரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப், 5-6வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 0-2 என, அமெரிக்காவின் ஹன்ஸ் நிமனிடம் தோல்வியடைந்தார். பைனலில், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 2.5 - 1.5 என அமெரிக்காவின் பேபியானோ காருணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.