'சூப்பர்-8' சுற்றில் இங்கிலாந்து: இத்தாலி துணிச்சல் ஆட்டம் வீண்

கோல்கட்டா: வில் ஜாக்ஸ் விளாசல் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெற்றது. லீக் போட்டியில் இத்தாலி அணியை 24 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் இரு முறை சாம்பியன் இங்கிலாந்து, அறிமுக இத்தாலி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


ஜாக்ஸ் அசத்தல்: கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அனுபவ ஜாஸ் பட்லர் (3) ஏமாற்றினார். பில் சால்ட், 28 ரன் எடுத்தார். பெத்தல் (23), ஹாரி புரூக்(14) நிலைக்கவில்லை. 11 ஓவரில் 93/4 ரன் எடுத்து தவித்தது. பான்டன், 30 ரன்னுக்கு வெளியேறினார். பின் வில் ஜாக்ஸ் கலக்கினார். பென் மெனன்டி ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்தார். சாம் கர்ரான், 25 ரன் விளாசினார். கிரான்ட் ஸ்டூவர்ட் பந்தை சிக்சருக்கு அனுப்பிய வில் ஜாக்ஸ், 21 பந்தில் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 202/7 ரன் குவித்தது. வில் ஜாக்ஸ் (53 ரன், 22 பந்து, 3X4, 4X6), ஆர்ச்சர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.


22 பந்தில் அரைசதம்: கடின இலக்கை விரட்டிய இத்தாலி அணிக்கு 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் ஏமாற்ற, 4 ஓவரில் 22/3 ரன் எடுத்து தத்தளித்தது. பின் ஜஸ்டின் மோஸ்கா, பென் மெனன்டி துணிச்சலாக போராடினர். ஜாக்ஸ் ஓவரில் (12வது) பென் (4,6,6,4) விளாச, 21 ரன் கிடைத்தன. 22 பந்தில் அரைசதம் எட்டிய பென், 60 ரன்னுக்கு (25 பந்து, 4X4, 6X6) அவுட்டாக, இங்கிலாந்துக்கு நிம்மதி ஏற்பட்டது. ஜஸ்டின் மோஸ்கா, 43 ரன் எடுத்தார். அடில் ரஷத் ஓவரில் 3 சிக்சர் விளாசிய ஸ்டூவர்ட், 45 ரன்னுக்கு அவுட்டானார். இத்தாலி அணி 20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்து, வெளியேறியது.
ஆட்டநாயகன் விருதை வில் ஜாக்ஸ் (53 ரன், 1 விக்.,) வென்றார்.

Advertisement