இஷான் கிஷான் ரன் மழை பொழியும் ரகசியம்

கொழும்பு: 'உலக நாயகனாக' உச்சம் கொட்டுள்ளார் இஷான் கிஷான். சோதனைகளை கடந்த இவர், 'டி-20' உலக கோப்பை தொடரில் ரன் மழை பொழிகிறார்.


இந்திய அணியின் விக்கெட்கீப்பர்--பேட்டர் இஷான் கிஷான், 27. உள்ளூர் ரஞ்சி போட்டியை புறக்கணித்தது உள்ளிட்ட சர்ச்சையில் சிக்க, 2024ல் பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு 2025ல் நடந்த சையது முஷ்தாக் அலி 'டி--20' தொடர் திருப்புமுனையாக அமைந்தது. 10 போட்டியில் 517 ரன் (சராசரி 57.44, ஸ்டிரைக் ரேட் 197.32) விளாசி, ஜார்க்கண்ட் அணிக்கு முதல் கோப்பை பெற்று தந்தார். இதையடுத்து இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது.


சாம்சன் தொடர்ந்து சொதப்ப, தற்போதைய 'டி-20' உலக கோப்பை தொடரில் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். கொழும்புவில் நேற்று முன் தினம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 27 பந்தில் அரைசதம் எட்டினார். 40 பந்தில் 77 ரன் (10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி, வெற்றி நாயகனாக ஜொலித்தார்.


கடின பயிற்சி: சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் 'பீனிக்ஸ்' பறவை போல இஷான் கிஷான் ஜொலிக்கிறார். இதற்கு பாட்னாவில் உள்ள இவரது கிரிக்கெட் அகாடமியில் நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டது முக்கிய காரணம். கோபத்தை குறைக்க தியானம், மன அமைதிக்கு புனித பகவத் கீதையை அன்றாடம் படிக்கிறார். முதிர்ச்சி அடைந்த வீரராக மாறிய இவர், மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விளாசுகிறார். ரிஷாப் பன்ட், சாம்சன், துருவ் ஜுரல் போன்ற கீப்பர்-பேட்டர்களின் சவாலை சமாளித்து, இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
இஷான் கூறுகையில்,''பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி, இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது,''என்றார்
பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறுகையில்,''இஷான் கிஷானின் துணிச்சலான 'பேட்டிங்' வியக்க வைத்தது. 'லெக்' திசையில் மட்டுமல்லாமல் 'ஆப்' திசையிலும் விளாசுகிறார். 'ரிவர்ஸ் ஸ்வீப்' மூலம் 'ஸ்பின்னர்'களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார். போட்டியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்,''என்றார்.


'அனல்' ஆட்டம் எங்கே
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் அனல் பறக்கும். 1980, 90களில் பாகிஸ்தான் அணியில் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர், சக்லைன் முஷ்டாக், ரமிஸ் ராஜா, ஆமிர் சோகைல் போன்ற வீரர்கள் இருந்தனர். இவர்களது ஓய்வுக்கு பின் தரமான வீரர்கள் கிடைக்கவில்லை. தற்போது வலுவான இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதால், போட்டி ஒருதலைபட்சமாக முடிகிறது. நேற்று முன் தினம் வென்ற இந்தியா, 'டி-20' உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 8-1 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா தான் வெற்றி பெறும் என்பது தெரிந்துவிடுகிறது. இதனால் இந்தியா-பாக்., போட்டிக்கு வர்த்தக ரீதியிலான மதிப்பு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement