அமைச்சர் நேரு துறையில் ஊழல்! வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
சென்னை : 'தமிழக அமைச்சர் நேரு கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளது. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர்கள் கே.என்.ரவிச்சந்திரன், மணிவண்ணன். இவர்களது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது, காகிதம் மற்றும் மின்னணு வடிவில், 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, பணி நியமனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதால், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுங்கள் என, தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை தரப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ல் கடிதம் அனுப்பப்பட்டது.
அமலாக்கத் துறையிடம், 232 பக்க ஆவணங் களுடன் கூடிய தகவல்களை பெற்ற மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்யவில்லை.
காவல் துறை கடமை
அந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழக டி.ஜி.பி., வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரும், லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யும்படி, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரையும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இன்பதுரை தரப்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, “நகராட்சி நிர்வாக துறையில், அமைச்சர் முதல் உயர் அதிகாரிகள் வரை, மிகப்பெரிய அளவில் பணி நியமனங்களில் மோசடி நடந்துள்ளது. அமலாக்கத்துறை தகுந்த ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியுள்ளது. அதை உடனே விசாரித்து வழக்கு பதிவு செய்வது, மாநில அரசின் காவல் துறையின் கடமை. ஆனால், வழக்கு பதிவு செய்யாமல், ஆரம்பகட்ட விசாரணை எனக்கூறி இழுத்தடித்து வருகின்றனர்,” என்றார்.
232 பக்க ஆதாரங்கள்
அமலாக்கத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் என்.ரமேஷ் ஆஜராகி, “இந்த விவகாரத்தில், டி.ஜி.பி.,க்கு வெறும் தகவலை மட்டும் அனுப்பி வைக்கவில்லை. தகுந்த ஆதாரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே, ஆரம்பகட்ட விசாரணை நடத்தாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்யலாம். மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி கடிதம் அனுப்பிய நிலையில், நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம். அதாவது, 232 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை கடிதத்துடன் அனுப்பி உள்ளோம்,” என்றார்.
அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “கடந்த ஆண்டு அக்டோபர் 27ல் அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தை, அரசுக்கு டி.ஜி.பி., அனுப்பி வைத்தார். விரிவான விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணையை முடிக்க, 180 நாட்கள் அவகாசம் உள்ளது.
“இந்த விவகாரத்தில் நேரடியாக வழக்கு பதிவு செய்ய வாய்ப்பில்லை. மனுதாரர் ஆதிநாராயணனுக்கு எதிராக, 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் ஆறு கொலை, கொலை முயற்சி வழக்குகள். வழக்கு தாக்கல் செய்துள்ள நபர்களில் ஒருவர் அரசியல்வாதி. வங்கி மோசடி வழக்கில், அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கை, கடந்த ஆண்டு ஜூலை 24ல் 'டிவிஷன் பெஞ்ச்' ரத்து செய்துள்ளது,” என்றார்.
டி.ஜி.பி., தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “லஞ்ச ஒழிப்பு துறையில் முதற்கட்ட விசாரணை நடக்கும் நிலையில், இந்த மனுக்கள் நிலைக்கத்தக்கது அல்ல. மனுதாரர்களுக்கு, இந்த மனுவை தாக்கல் செய்ய அடிப்படை உரிமை இல்லை. எந்த வழக்கின் சோதனையில் ஆதாரங்கள் கிடைத்ததாக அமலாக்கத் துறை கூறுகிறதோ, அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டது,” என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்துள்ள இந்த மெகா ஊழல் வாயிலாக, கோடிக்கணக்கான லஞ்சப்பணம் ஹவாலா முறையில் கைமாறி உள்ளது என, அமலாக்கத்துறை ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில், அரசு உயர் அதிகாரிகள், அமைச்சரின் உறவினர்கள், அரசியல்வாதிகளின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள், விண்ணப்பதாரர்கள் என அனைவருக்கும் தொடர்பு உள்ளது.
முறைகேடாக பணியில் சேர்ந்து ஆறு மாதங்களாகியும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 10 ரூபாய் நோட்டை அடையாளமாக கொடுத்து அனுப்பி, கோடிக்கணக்கில் லஞ்சப்பணம், ஹவாலா முறையில் வசூலிக்கப்பட்டுள்ளது.
பல பரிவர்த்தனைகள்
இதற்கான ஆதாரங்களை, வாட்ஸாப் உரையாடல்கள், 'ஸ்கிரீன் சாட்' வாயிலாக அமலாக்கத்துறை நிரூபித்துள்ளது. இந்த தகவல்களை வேறு யாரும் அனுப்பவில்லை. தேர்வுக்கு முன்பே, அழைப்பு கடிதங்கள் பகிரப்பட்டு உள்ளன. அதாவது குறைந்தது 147 பேரின் விபரங்கள், தகவல் தொடர்புகள் மற்றும் அவர்களின் இறுதித்தேர்வு, பதவிகளுக்கான நியமனம் குறித்த விபரங்கள், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களில் விரிவாக பகிரப்பட்டுள்ளன.
பழைய 10 ரூபாயை பயன்படுத்தி, 6.5 கோடி மற்றும் 11.4 கோடி ரூபாய் வரை, பெரிய அளவில் நிதி மோசடி செய்யப்பட்ட பல பரிவர்த்தனைகள், அமலாக்கத்துறை வழங்கிய தகவல்களில் உள்ளன.
அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி மூன்றரை மாதங்களுக்கு மேலாகியும், தமிழக காவல் துறை வழக்கு பதியாமல், ஆரம்பகட்ட விசாரணை எனக்கூறி காலம் தாழ்த்தி வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை, கடும் சந்தேகங்களையும் கவலையையும் எழுப்புகிறது.
அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், அரசு கவனமாக செயல்பட்டு, எந்த தாமதமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணையை நடத்தி இருக்க வேண்டும். வழக்கு பதிவு செய்து விசாரிப்பதில் ஏற்படும் தாமதம் வழக்குக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, வழக்கு சார்ந்த ஆவண, ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது.
எனவே, அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உடனே வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிநாராயணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இன்பதுரை தொடர்ந்த வழக்கை முடித்து வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எந்த குற்றமும் செய்யவில்லை
உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து நிருபர்களிடம் அமைச்சர் நேரு கூறுகையில், “தமிழக அரசு சார்பாக தெளிவான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என, நீதிமன்றத்தில் நிரூபித்து வெளியே வருவோம்,” என்றார்.
அதேநேரத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் அளித்த பேட்டி:
நேரு மீது சி.பி.ஐ., விசாரணை நடந்து கொண்டிருந்த போது, அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்ததாக சொல்கின்றனர். இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., வழக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் மனு தாக்கல் செய்தார். அந்த முக்கிய வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. சி.பி.ஐ., வழக்கு ரத்து செய்யப்பட்டதால், அமலாக்கத்துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும், அவர்கள் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை கேட்டுக் கொண்டனர்.
அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு ஏற்கனவே விசாரணை நடத்திக் கொண்டிருப்பதை கருத்தில் வைத்து, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இது, ஒன்றும் பின்னடைவு அல்ல. தி.மு.க.,வின் சட்டத்துறை, இதை சட்டரீதியாக சந்தித்து முறியடிக்க தயாராக இருக்கிறது. நேரு மீது, ஜெயலலிதா பல வழக்குகளை தொடுத்திருக்கிறார். அத்தனை வழக்குகளையும் எதிர்கொண்டு வென்று காட்டியவர் தான் நேரு. இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
@quote@
தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், நேரு மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்த ஸ்டாலின், தற்போது என்ன பதில் கூறப்போகிறார். தி.மு.க., ஆட்சியில், ஒரு ஆண்டில் ஒரு துறையில் மட்டுமே, 2,300 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது. இந்த ஊழல்கள் எல்லாம், தனக்கு தெரியாமல் நடந்தது என்று ஸ்டாலின் கூறப்போகிறாரா. உடனே, அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், அனைத்து ஊழல்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்தே நடந்திருக்கிறது என்ற முடிவுக்கே மக்கள் வருவர்.
- அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்quote
@quote@
குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில், 10 சதவீதம் வரை லஞ்சம் பெற்று, 1,020 கோடி ரூபாய் ஊழல் புரிந்த அமைச்சர் நேரு மீது, வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க., அரசின் ஊழல் கோட்டை, சுக்குநுாறாக இடிந்து விழும் நாளுக்கான, 'கவுன்ட் டவுன்' இன்றோடு துவங்கி விட்டது. விரைவில், தி.மு.க., உடன்பிறப்புகளின் ஒட்டுமொத்த ஊழலும், நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டு மக்களால் விரட்டியடிக்கப்படுவர்.
- நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்quote
@quote@
தி.மு.க., ஆட்சி என்றாலே ஊழல் தான் என்று கூறும் அளவுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடி வருகிறது. இது குறித்து விசாரிக்க, தி.மு.க., அரசு மறுத்து வருகிறது. இப்போது, 888 கோடி ரூபாய் பணி நியமன ஊழல் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை முன்மாதிரியாக வைத்து, மற்ற ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்வர வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால், தி.மு.க.,வின் ஊழல் கோட்டை இடிந்து தரைமட்டமாகும்.
- அன்புமணி, பா.ம.க., தலைவர்quote
அமலாக்கதுறையை உச்சநீதிமன்றம் எத்தனை முறை எச்சரிக்கை விடுத்தாலும் அவர்கள் விசுவாசம் குறையவே இல்லை என்று ஊடகங்களின் தரவுகள் அடிப்படையில் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மானஸ்தர்கள்
கோர்ட் சொன்னாலும் வழக்கு பதிய மாட்டான்கள் தமிழக லஞ்சஒழிப்புத்துறை பாருங்க , ஏனேன்றால் அத்தனை அரசுத்துறையும் அயோக்கியர்கள் நிறைந்தது அதுவும் காவல்துறை உயர் பதவி ஆட்கள் கேவலமான திருடன்கள் கையில்
நேரு ராஜினாமா செய்து திமுக கட்சி பெயரை காப்பற்ற வேண்டும்.! அது தான் தர்மம்/அழகான செயல்?
நேரு அவர்கள் தனது சகோதரனை இழந்ததுக்கு எவ்வளவு துயரப்பயிருப்பாரோ அதே அளவு தகுதி இருந்தும் வேலை கிடைக்காதவன் வேதனைப்பட்டிருப்பான். 146 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு 146 பேரை குரல் வலையை நெரித்திருக்கிறார் நேரு. இதைவிட கடினமாக சொல்லத்தெரியவில்லை. நாடும் பல தேர்வுகள் எழுதி தோல்வி கண்டவன் தான்
இவர்கள் சட்டவிரோதமானவர்கள், இவர்கள் நேர்மையுடன் நடந்துகொள்ளவில்லை, ஆட்சி அதிகாரத்தில் குறைந்தபட்ச நேர்மையைக்கூட இவர்கள் கடைபிடிக்கவில்லை அதை கேட்கும் தைரியம் முதல்வருக்கும் இல்லை துணை முதல்வருக்கும் இல்லை.
திருச்சியின் கட்ட பஞ்சாயத்து மகன்கள் இருவர். ஒருவர் கே என் நேரு மற்றொருவர் அன்பில் மகேசு பொய் மொழி. திருச்சியில் வரும் எந்த அரசு கான்ட்ராக்ட் வேலைகளும் இந்த இரண்டு கும்பலுக்குத்தான் கிடைக்கும். அவ்வளவு ரௌடிகளை, குண்டர்களை, அல்லக்கைகளை தங்கள் வசம் வைத்திருப்பார்கள். நேர்மையாக இருக்கும் வேறு யாரும் பணம் சம்பாதிக்க முடியாதபடி பார்த்துக்கொள்வார்கள்.
நீங்க என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் எங்களை ஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் ஒன்றும் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ இல்லை. இந்தியாவில் எந்த கோர்ட்டுக்கு போனாலும் எங்களால் எதிர்த்து வாதாட முடியும். இந்த வழக்கு அடுத்த நூற்றாண்டுவரை தொடரும்.
கமிஷன் சரியாக கொடுக்காத பழைய மாணவர்களுக்கு அடைப்பெடுத்தாலும் கூட போலீஸ் மந்திரி கவலைப்பட மாட்டார். அவருக்குத்தேவை நேர்மையாக கமிஷன் கொடுக்கும் குறுநில மன்னர்கள். அவசியம் ஏற்பட்டால் புதிதாக ஆத்தா தீம்க்காவில் இருந்து நாலு பேரை வேலைக்கு எடுக்க தயார்.
நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம் கோணல் ஸாரி நேரு. வழக்குப் பதியவே இப்பொழுதுதான் நிதிமன்றம் ஸாரி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இனி வழக்குப் பதிந்து விசாரணை ஆரம்பிக்கவே 2037 ஆம் வருடம் ஆகி விடும். வழக்கு தீர்ப்பு வர எப்படியும் 2081 ஆம் வருடம் ஆகி விடும். அதுனால டோன்ட் கேர். பி ஹாப்பி.மேலும்
-
தி.மு.க.,வில் சேர வந்த அழைப்புக்கு ஓ.பி.எஸ் மறுப்பு!
-
மிதக்கும் சூரிய மின்சார உற்பத்தி திட்டம் நீர்நிலைகளை அடையாளம் காண வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
-
அமெரிக்க கோர்ட் தீர்ப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை
-
மதுரை எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் பின்னாக்கிள் இன்போடெக் துவக்கம் 2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு
-
சுற்றுலா திட்டங்களுக்கு தமிழக அரசு டெண்டர்
-
தமிழக அரசை கண்டித்து பா.ஜ., இளைஞரணி ஆர்ப்பாட்டம்