மதுரை எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் பின்னாக்கிள் இன்போடெக் துவக்கம் 2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

மதுரை: மதுரை வடபழஞ்சி எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 150 கோடி ரூபாயில், 'பின்னாக்கிள் இன்போடெக்' நிறுவன உலகத்தர பொறியியல் மேம்பாட்டு மையத்தின், இரண்டாவது திட்ட கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

மொத்தம், 14.30 ஏக்கரில் அமைய உள்ள பின்னாக்கிள் பணியாளர் குடியிருப்பு திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதன் வாயிலாக, 1,200 பணியாளர்கள் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் தங்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இதுகுறித்து பின்னாக்கிள் தலைமை நிர்வாக அதிகாரி பிமல் பட்வாரி கூறியதாவது:

ஏ.ஐ.,தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியல் துறையில், உலகில் பின்னாக்கிள் முன்னணியில் உள்ளது. மதுரையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை பயன்படுத்தி ஏற்கனவே 2,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம்.

அதை 4,000 பேராக இரட்டிப்பாக்குவோம். உலகின் சிக்கலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, இந்தியாவிலிருந்தே உயர்தர டிஜிட்டல் சேவைகளை வழங்கும் திறனை இம்மையம் மேம்படுத்துகிறது.

தமிழகம் ஆண்டுதோறும் 5 லட்சம் பட்டதாரிகளை உருவாக்குகிறது. இதில், 2 லட்சம் பேர் பொறியாளர்கள். தகவல் தொழில்நுட்பத்துறைகளில் 6 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். நாட்டின் 21 சதவீத பொறியாளர்களை, தமிழகம் உருவாக்குகிறது. இது, மாநிலத்தின் திறனை வெளிப்படுத்துகிறது என்றார்.

ஹெச்.சி.எல்., நிறுவனம், எல்காட்டில் புதிதாக 150 கோடி ரூபாய் முதலீட்டில் 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

Advertisement