குஜராத்தில் எல் அண்டு டி., ரூ.25,000 கோடி முதலீடு
புதுடில்லி: குஜராத்தில் 25,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஏ.ஐ., தரவு மையம் அமைக்க, மாநில அரசுடன், எல் அண்டு டி., நிறுவனம் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.
குஜராத் மாநிலம் தோலேரா பகுதி, சிறப்பு முதலீட்டு மண்டலமாக உள்ளது. இங்கு ஒரு பிரமாண்டமான ஏ.ஐ., தரவு மையத்தை உருவாக்க, குஜராத் அரசு மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் தரவு மைய பிரிவான, 'வ்யோமா' இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது, டில்லியில் நடைபெற்ற இந்திய ஏ.ஐ., உச்சி மாநாட்டில், குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா முன்னிலையில் நடைபெற்றது.
இதன்படி, எல் அண்டு டி.,யின், வ்யோமா, 250 மெகாவாட் திறன் கொண்ட பசுமை தரவு மையத்தை அமைக்க 25,000 கோடி ரூபாயை முதலீடு செய்யும். வரும் 2028ம் ஆண்டுக்குள் பணி களை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் அரசு ஏற்கனவே கடந்த பட்ஜெட்டில் ஏ.ஐ., மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்காக 850 கோடி ரூபாய் ஒதுக்கிஉள்ளது.