இதே நாளில் அன்று
பிப்ரவரி 22, 2006
இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகில் வட்டுக்கோட்டையில், தமிழர்களான ரப்பர் தோட்ட மேலாளர் சபாபதி பிள்ளை சின்னத்தம்பி - அன்னம்மா தம்பதியின் மகனாக, 1915, பிப்ரவரி 25ல் பிறந்தவர், சி.ராஜரத்தினம்.
இவரது தந்தை மலேஷியா சென்றதால், இவரும் அங்கு பள்ளி படிப்பை முடித்து, லண்டனில் சட்டம் படித்தார். இரண்டாம் உலகப்போரின்போது, இதழியல் துறையில் ஈடுபட்டார்.
அப்போது, அரசியல் ஆர்வத்தாலும், கம்யூனிச சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டார். மலேஷியா திரும்பி, லீ குவான் யூ உடன் இணைந்து, மக்கள் செயல் கட்சியை துவக்கி, சிங்கப்பூர் சுதந்திரத்துக்கு பாடுபட்டார்.
'சிங்கப்பூரில் பிறந்தவர்கள் சிங்கப்பூரியர்கள்; மொழி பாகுபாடுகளை கடந்தவர்கள்' என்ற வாசகத்தால் ஒருமைப்பாட்டை நிலைநாட்டி, ஐ.நா., சபை, காமன்வெல்த் அமைப்புகளிடம் தனி நாடு அங்கீகாரத்தை பெற்றார். 'ஆசியான்' அமைப்பை நிறுவியவர்களில் ஒருவராகவும், சிங்கப்பூரின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் துணை பிரதமராகவும் இருந்து, நாட்டை வளப்படுத்தினார்.
சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை அங்கீகரித்தவர், தன் 90வது வயதில், 2006ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!