தமிழக பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அன்புமணி கண்டனம்

சென்னை: 'கடந்த ஐந்தாண்டுகளில், 11,688 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதை சாதனையாகக் கொண்டாடுவது வெட்கக்கேடானது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

க டந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில், 11,688 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை சாதனையாக தி.மு.க., அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வகுப்புகளுக்கு, ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், காலியிடங்களில் 10ல் ஒரு பங்கை கூட நிரப்பாமல், சாதனை மகுடம் சூடிக்கொள்ள துடிப்பது வெட்கக்கேடானது.

தி.மு.க., அரசால் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் 11,688 ஆசிரியர்களில், 8,000 பேர் கடந்த ஆறு மாதங்களில் நியமிக்கப்பட்டவர்கள். அவர்களும், தேர்தலை கருத்தில் வைத்தே நியமிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் 3,800க்கும் மேற்பட்ட துவக்கப் பள்ளிகளில், தலா ஒரே ஒரு ஆசிரியர், 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 1 லட்சத்து 8,537 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

ஒரு பள்ளிக்கு சராசரியாக, 3.46 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதனால் தான், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது; கல்வியின் தரமும் குறைந்து காணப்படுகிறது. அரசு பள்ளிகள் உள்ளிட்ட அரசு கல்வி நிறுவனங்களை சீரழித்த தி.மு.க., அரசு, அதை மறைப்பதற்காக, இத்தகைய வெற்று விளம்பரங்களை செய்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement