மைக்ரோசாப்ட் கேமிங் சிஇஓ ஆக வம்சாவளி இந்தியர் ஆஷா சர்மா நியமனம்

7

நமது நிருபர்




உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட், தனது விளையாட்டுப் பிரிவான Microsoft Gaming நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷா சர்மாவிடம் ஒப்படைத்துள்ளது.

யார் இந்த ஆஷா சர்மா?



இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆஷா சர்மா, 43. இவர், மின்னசோட்டா பல்கலையின் கார்ல்சன் மேலாண்மை பள்ளியில் பட்டம் பெற்றவர். நவீன தொழில்நுட்பப் பொருளாதாரம், சந்தை, சமூக வலைதளங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு என பலதரப்பட்ட துறைகளில் படிப்பும் அனுபவமும் கொண்டவர்.


இவர், மைக்ரோசாப்ட்டில் செயற்கை நுண்ணறிவு (CoreAI) பிரிவின் தலைவராக பணிபுரிந்து வந்தார். மெட்டா நிறுவனத்தின் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரிவுகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது பணி பலரது பாராட்டுகளையும் பெற்றது. சிஇஓ சத்யா நாதெல்லாவின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

முக்கிய பொறுப்பு




தற்போது மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவின் தலைவராக உள்ள பில் ஸ்பென்சர் தனது 38 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அந்த பொறுப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷா சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.


ஏஐ தொழில்நுட்ப துறையில் அனுபவம் பெற்றுள்ள ஆஷா சர்மாவின் திறமை, கேமிங் துறையில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவன தலைமைப் பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கம் தொடர்வதை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்த நியமனம் உள்ளது.

25வது ஆண்டு




விஸ்கான்சினில் பிறந்த 43 வயதான ஆஷா சர்மாவை, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா பாராட்டி உள்ளார். ''கேமிங் துறையில் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு ஆஷாவின் அனுபவம் பெரிதும் உதவும் '' என்று சத்யா நாதெல்லா தெரிவித்து இருக்கிறார்.


2026ம் ஆண்டு மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவு தொடங்கி 25வது ஆண்டு நிறைவு பெறுகிறது. தற்போது எக்ஸ்பாக்ஸ் தளத்திற்கு மாதந்தோறும் 50 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர்.

''கேமிங் என்பது ஒரு கலை; அது மனிதர்களால் உருவாக்கப்பட வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவை முதன்மையான ஒன்றாக மாற்றுவதே தனது இலக்கு'' என ஆஷா சர்மா தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது முடிவை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement