ஏஐ மாநாட்டை இழிவான அரசியல் தளமாக மாற்றிய காங்கிரஸ்: பிரதமர் மோடி கண்டனம்

5

மீரட்: '' டில்லியில் நடந்த உலகளாவிய மாநாட்டை தனது இழிவான அரசியலுக்கான தளமாக மாற்றிய காங்கிரசுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் மெட்ரோ ரயில் மற்றும் நமோ பாரத் ரயில்சேவையை பிரதம் மோடி துவக்கிவைத்தார். பல்வேறு நலத்திட்டங்களையும் அர்ப்பணித்தார்.


இதன் பிறகு அவர் பேசியதாவது: நாட்டின் பழமையான கட்சி எவ்வாறு கொள்கை ரீதியாக திவாலாகி, வறுமையில் வாடி உள்ளது என்பது டில்லியில் நடந்த ஏஐ மாநாட்டில் அக்கட்சியின் போராட்டம் காட்டுகிறது. சொந்த நாட்டை அவமதிப்பதிலேயே காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. நாட்டின் வெற்றியை சில அரசியல் கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாடு இந்தியாவில் நடந்ததை பார்த்தோம்.


ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது. இந்தியாவிற்கான உலகளாவிய நிகழ்ச்சியை காங்கிரஸ் தனது இழிவான மற்றும் நிர்வாண அரசியலுக்கான தளமாக மாற்றியது. காங்கிரஸ் தலைவர்கள் வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்பு நிர்வாணமாக வந்தனர். நீங்கள் நிர்வாணமாக இருப்பதை நாடு ஏற்கனவே அறியும். பிறகு ஆடையை கழற்ற வேண்டியது ஏன்?


காங்கிரஸ் தலைவர்கள் என்னை வெறுக்கலாம். எனக்காக சவக்குழி தோண்டலாம். எனது தாயாரை அவமதிக்கக்கூட அவர்கள் தயங்கவில்லை. ஏஐ மாநாடு பாஜவின் நிகழ்ச்சி அல்ல என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும். அங்கு பாஜ தலைவர்கள் பங்கேற்கவில்லை. இது தேசிய நிகழ்ச்சி. காங்கிரசின் ஊழல் அரசியலை நாட்டு மக்கள் கண்டிக்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement