தமிழகத்தில் கைதான வங்கதேசத்தினருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு: டில்லி போலீசார் தீவிர விசாரணை

3

புதுடில்லி : தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட, வங்கதேசத்தினர் எட்டு பேருக்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.


நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ல் அரங்கேறிய மாணவர்கள் போராட்டத்தால், அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்து விலகி, நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். அதன்பின், இருநாட்டுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது.


நம் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு, வங்கதேசத்தில் உள்ள பயங்கரவாத குழுக்களின் ஆதரவுடன் நம் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற திட்டம் தீட்டுவதாக, நம் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.


இதற்கிடையே மேற்கு வங்கம் மற்றும் தமிழக அரசுகளுக்கு, டில்லி போலீஸ் சமீபத்தில் ஒரு அறிவுறுத்தலை அனுப்பியிருந்தது. அதில், வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைந்து, போலி ஆவணங்களை பெற்று, வேலைகளில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களை கண்டறியும்படியும் தெரிவித்திருந்தது.


இதன்படி, திருப்பூர், கோவையில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வரும் வங்கதேசத்தினரை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அதில், உரிய ஆவணங்களில் இன்றி தங்கியிருந்த 103 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களில், மிஜனுார் ரகுமான், 33, முகமது ஷபாத், 35, உமர், 32, முகமது லிட்டன், 40, முகமது ஜாகீத், 40 மற்றும் முகமது உஜால், 29, என்ற ஆறு பேரும், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.


பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக டில்லியில் சமீபத்தில் சில இடங்களில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரின் உத்தரவின்படி, போஸ்டர்கள் ஒட்டிய இருவரை கைது செய்தனர்.


அவர்களுக்கும், திருப்பூரில் கைதான வங்கதேசத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கும் தொடர்பு இருப்பதை டில்லி போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, தமிழகத்திற்கு விரைந்த டில்லி போலீசாரிடம், ஆறு பேரையும் தமிழக போலீசார் ஒப்படைத்தனர்.


இதைத்தொடர்ந்து, கைதான நபர்களின் மொபைல் போன்கள், ஏராளமான சிம் கார்டுகள் மற்றும் அவர்கள் வைத்திருந்த போலி இந்திய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, மேற்கு வங்கத்திலும் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த எட்டு பேருக்கும், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கைதான எட்டு பேரிடமும் டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நேரடியாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ, பாக்., பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து அவர்கள் நிதி பெற்றது கண்டறியப்பட்டுள்ளது.


'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பழிவாங்கும் நோக்கில், டில்லி, உ.பி., உட்பட நம் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்த பாக்., பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், கைதான நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement