சரிந்தது இந்திய அணி 'பேட்டிங்': எளிதாக வென்றது தென் ஆப்ரிக்கா
ஆமதாபாத்: 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் பேட்டர்கள் சொதப்ப, இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. மில்லர் விளாசல் கைகொடுக்க, தென் ஆப்ரிக்கா எளிதாக வென்றது.
இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடந்த 'சூப்பர்-8' போட்டியில் (பிரிவு-1) 'நடப்பு சாம்பியன்' இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதின. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மாக்ரம், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
பும்ரா மிரட்டல்: தென் ஆப்ரிக்க அணி துவக்கத்தில் இந்திய பந்துவீச்சில் அதிர்ந்தது. பும்ரா 'வேகத்தில்' குயின்டன் டி காக் (6) போல்டானார். அர்ஷ்தீப் சிங் பந்தில் மார்க்ரம் (4) வெளியேறினார். தொடர்ந்து மிரட்டிய பும்ரா பந்தில் ரிக்கிள்டன் (7) அவுட்டாக, 4 ஓவரில் 20/3 ரன் எடுத்து தவித்தது. பின் மில்லர், பிரவிஸ் 4வது விக்கெட்டுக்கு 97 ரன் சேர்த்தனர். மில்லர் பவுண்டரிகளாக பறக்கவிட, 'பவர் பிளே' (முதல் 6 ஓவர்) முடிவில் 41/3 ரன்னை எட்டியது.
'வில்லன்' மில்லர்: வருண் ஓவரின் (போட்டியின் 9வது) 2வது பந்தில் மில்லர் ஒரு 'மெகா' சிக்சர் (95 மீ.,) அடித்தார். மறுபக்கம் பிரவிஸ் (4,6) தன்பங்கிற்கு விளாச, 17 ரன் எடுக்கப்பட்டன. பிரவிஸ் 45 ரன்னுக்கு அவுட்டானார். துபே பந்தை சிக்சருக்கு அனுப்பிய 'கில்லர்' மில்லர், 26 பந்தில் அரைசதம் கடந்தார். மீண்டும் பந்துவீச வந்த வருண் வலையில் மில்லர் (63 ரன், 7X4, 3X6) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
ஹர்திக் பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் ஸ்டப்ஸ் ஒரு பவுண்டரி, வரிசையாக 2 சிக்சர் அடிக்க, மொத்தம் 20 ரன் எடுக்கப்பட்டன. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/7 ரன் எடுத்தது. ஸ்டப்ஸ் (44) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா 3, அர்ஷ்தீப் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இஷான் ஏமாற்றம்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்தில் தடுமாறியது. 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் பொறுப்பற்ற 'ஷாட்' அடித்தனர். முதல் ஓவரை வீசிய மார்க்ரம் 'சுழலில்' இஷான் கிஷான் (0) சிக்கினார். யான்சென் 'வேகத்தில்' திலக் வர்மா (1) வெளியேறினர். ஒருவழியாக ரன் கணக்கை துவக்கிய அபிஷேக் சர்மா(15) அதிக நேரம் நீடிக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர்(11), கேப்டன் சூர்யகுமார்(18) விரைவில் அவுட்டாகினர். மஹாராஜ் ஓவரில் (15வது) பாண்ட்யா (18), ரிங்கு சிங் (0), அர்ஷ்தீப் (1) சிக்கினர். ஷிவம் துபே அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார்.
இந்திய அணி 18.5 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஆட்டநாயகன் விருதை மில்லர் வென்றார்.
அதிவேக அரைசதம்
'டி-20' உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் மில்லர் (26 பந்து) 4வது இடம் பிடித்தார். முதல் 3 இடங்களில் லிட்டன் தாஸ் (வங்கம், 21 பந்து, அடிலெய்டு, 2022), கிளாசன் (தெ.ஆ., 23 பந்து, பிரிட்ஜ்டவுன், 2024), டிராவிஸ் ஹெட் (ஆஸி., 24 பந்து, கிராஸ் ஐலெட், 2024) உள்ளனர்.
பும்ரா 33 விக்.,
'டி-20' உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் பும்ரா (33 விக்., 22 போட்டி) முதலிடத்திற்கு முன்னேறினார். அடுத்த இடங்களில் அர்ஷ்தீப் சிங் (32 விக்., 18 போட்டி), அஷ்வின் (32 விக்., 24 போட்டி ) உள்ளனர்.
12 போட்டிகளுக்கு பின்...
'டி-20' உலக கோப்பை அரங்கில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் அசத்திய (2024ல் 8, 2026ல் 4) இந்தியாவின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கடந்த 2022ல் அடிலெய்டில் நடந்த 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா, 12 போட்டிகளுக்கு பின் நேற்று முதன்முறையாக தோற்றது.
மேலும்
-
ஊராட்சியில் திருட்டு மின்சாரம் உபயோகம்: 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு
-
பச்சை வண்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை
-
இன்று இனிதாக
-
சின்னாளபட்டியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
-
2 வயது குழந்தையை கடத்திய சென்னை தம்பதி சுற்றிவளைப்பு
-
'சீட்' தராவிட்டாலும் தேர்தல் பணி செய்வேன்