எங்களை பார்த்து திமுக பயப்பட தேவையில்லை: நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடி: '' நாங்கள் யாரையும் அச்சுறுத்தவோ, மிரட்டவோ விரும்பவில்லை. நாட்டு மக்களுக்கு சிறந்த நிர்வாகத்தை அளிப்பதே எங்களின் நோக்கம். திமுக எங்களை பார்த்து பயப்பட தேவையில்லை'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.


இது தொடர்பாக தூத்துக்குடியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் தனிப்பட்ட விருப்பம். அதற்கு என்னால் பதில் கொடுக்க முடியாது. முதல்வர் ஸ்டாலினை, அவர் ஏன் சந்தித்தார் என்பது பற்றி தெரியாது. மரியாதை நிமித்தமாக சந்தித்தாரா? அல்லது கூட்டணி குறித்து விவாதிக்க சந்தித்தாரா? என்பது பற்றி தெரியாது. இந்த சந்திப்பு குறித்து உரிய விளக்கம் கிடைக்கப்பெற்றால், அது குறித்து பேசுவோம்.

நாங்கள் யாரையும் அச்சுறுத்தவோ, மிரட்டவோ விரும்பவில்லை. நாட்டு மக்களுக்கு சிறந்த நிர்வாகத்தை அளிப்பதே எங்களின் நோக்கம். திமுக எங்களை பார்த்து பயப்பட தேவையில்லை.

புது திட்டங்கள் அறிவிக்கப்படும் போது எல்லாம் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என திமுக தலைவர்களே கூறிக் கொள்கின்றனர். ஆனால், உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறோமா அல்லது இல்லையா என்பது குறித்து மக்கள் தான் சொல்ல வேண்டும். தமிழக மக்களுக்கு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.


கஞ்சா இல்லாத மாநிலமாக மாற வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மாதத்துக்கு ஒரு முறை மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்தனர். ஆனால், அப்படி அமல்படுத்தப்படவில்லை. எந்த திட்டத்தையும் அவர்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. 5 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு, முதல்வர் டிவி முன்னர் வந்து, மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக சொல்கிறார். இதனை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement