ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ரூ.1,677 கோடியில் புதிய முனையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ரூ.1,677 கோடி மதிப்பீட்டில் புதிய முனையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை இன்று (பிப்ரவரி 24) ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது:
இத்திட்டம் சுமார் ரூ.1,677 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.71,500 சதுர மீட்டர் பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையக் கட்டிடம் கட்டப்படும்.

இந்த விரிவாக்கத்தின் மூலம், நெரிசல் மிகுந்த நேரங்களில் 2,900 பயணிகளைக் கையாள முடியும். மேலும், ஆண்டுக்கு 1 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் இதன் திறன் அதிகரிக்கப்படும்.
73.18 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த என்கிளேவில், 15 விமானங்களை நிறுத்தும் வசதி, 1,000 கார்களுக்கான பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை இடம்பெறும்.
இந்திய விமானப்படையின் பட்காம் விமான தளத்திற்குள் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தை, இந்திய விமான நிலைய ஆணையம் நிர்வகிக்கும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் வான்வழிப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.


இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Advertisement