சிதைந்த கனவுகளும்,வாழ்க்கையும்


ருஸ்லான் க்னிஷ்

ஒரு 20 வயது இளைஞன்

கடந்த ஆண்டு நடந்த ட்ரோன் தாக்குதல், அவனது இரு கைகளையும், இரு கால்களையும் பறித்துக்கொண்டது. இன்று அவன் உக்ரைனின் கீவ் நகரின் மருத்துவமனை படுக்கையில், யாரோ மாட்டி வைத்திருக்கும் 'டேப்லெட்' திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் கண்கள் தேடுவது செய்திகளை அல்ல, "போர் முடிவுக்கு வந்தது" என்ற ஒரே ஒரு வரிச் செய்தியை மட்டும் தான்! அந்த ஒரு வரியாவது அவன் எஞ்சியிருக்கும் வாழ்நாளை அமைதியாக்காதா என்ற ஏக்கம் அது.
Latest Tamil News
இவரைப் போல சுமார் 50,000-க்கும் மேற்பட்ட உக்ரைன் இளைஞர்கள் இன்று ஊனமுற்றவர்களாக, ஆங்காங்கே மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்கள் சொந்த மண்ணிலேயே எதிலிகளாகிப் போனார்கள். தாகத்திற்குத் தண்ணீர் குடிக்கவும், முகத்தில் அமரும் ஈயை விரட்டவும் கூட இன்னொருவரின் உதவியை எதிர்பார்த்து வாழும் இந்த நரக வாழ்க்கையை விட, "போரில் மடிந்த அந்த 3 லட்சம் பேர்களில் ஒருவனாக நானும் போயிருக்கலாமே" என்று அவர்கள் சிந்தும் கண்ணீர், எந்த ஆயுதத்தையும் விடக் கூர்மையானது.

பிப்ரவரி 2022-ல் தொடங்கிய இந்தப் போர், இன்று ஐந்தாவது ஆண்டைத் தொடுகிறது. நவீன வரலாற்றில் ஒரு நாடு இவ்வளவு நீண்ட காலம் இடைவிடாத தாக்குதலைச் சந்திப்பது இதுவே முதல்முறை. இந்த ஐந்து ஆண்டுகளில் உக்ரைனின் வரைபடம் மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் தலையெழுத்தே தலைகீழாக மாறியுள்ளது.

கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, அரசின் அழுத்தம் காரணமாக துப்பாக்கியை ஏந்திச் சென்ற அந்த இளைஞர்கள் இன்று வெறும் உடல்களாகத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இது வெறும் உடல் ரீதியான ஊனம் அல்ல; ஒரு நாட்டின் வருங்காலத் தூண்கள் சரிந்து விழுந்ததன் அடையாளம். 3,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் தரைமட்டமான நிலையில், பதுங்கு குழிகளில் பாடம் படிக்கும் ஒரு தலைமுறை எப்படி ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தப்போகிறது?

தலைமுறை தலைமுறையாகச் சேர்த்து வைத்த சொத்துக்களும், ஆசையாய் செதுக்கிய வீடுகளும் இன்று வெறும் கற்குவியல்கள். சொந்த மண்ணிலேயே அகதிகளாகவும், அண்டை நாடுகளில் ஏதிலிகளாகவும் தஞ்சம் புகுந்துள்ள மக்களின் வாழ்வாதாரம் இன்று ஒரு கேள்விக்குறி.

எல்லாவற்றிற்கும் மேலாக, 'குடும்பம்' என்ற அழகான பிணைப்பு போரால் சிதைக்கப்பட்டுள்ளது. கணவனைப் பறிகொடுத்த மனைவிகள், தந்தையைத் தொலைத்த குழந்தைகள், போர்க்களத்திற்கு அனுப்பிய மகனின் வருகைக்காகச் வாசலையே பார்த்துக் கொண்டிருக்கும் முதியவர்கள் என ஒவ்வொரு வீட்டுச் சுவருக்குப் பின்னாலும் ஒரு சோகக் காவியம் ஒளிந்துள்ளது.

யுத்தம் என்பது நிலப்பரப்பைக் கைப்பற்றுவது மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் ஆன்மாவைச் சிதைப்பது. ருஸ்லான் க்னிஷ் போன்ற வீரர்கள் நாளை செயற்கை உறுப்புகளைப் பொருத்திக்கொண்டு நடக்கலாம், ஆனால் அவர்கள் இழந்த வசந்த காலத்தையும், மன அமைதியையும் எந்தத் தொழில்நுட்பத்தாலும் மீட்டுத் தர முடியாது.

சுமார் 80 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். 50 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே நாடோடிகளாகி விட்டனர். நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த லட்சக்கணக்கான உக்ரைன் மக்களின் ஒரே பிரார்த்தனை இதுதான்: "எங்கள் நிலங்களை விட எங்கள் உயிர்கள் மேலானவை... இனி ஒரு போர் வேண்டாம், அமைதி மட்டுமே வேண்டும்!"

-எல்.முருகராஜ்

Advertisement