பிரேசில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

பிரேசிலியா: பிரேசிலில் கடுமையான கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


தென் அமெரிக்க நாடான பிரேசிலில், மலைகள், பள்ளத்தாக்குகள் நிறைந்த தென்கிழக்கு மாகாணமான மினாஸ் ஜெரைசில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதில் ஜுயிஸ் டிபோரா, உபா நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


அங்கு பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவு 584 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின.


ஜுயிஸ் டிபோராவில் மட்டும், 18 பேர் உயிரிழந்துள்ளனர். உபாவில் 7 பேர் பலியாகியுள்ளனர். காணாமல் போன 40-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவி மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement