'இலவசங்கள் எங்களை வதைக்கும்': தமிழக தொழில் நிறுவனங்கள் அலறல்

13

சென்னை: 'சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க., - அ.தி.மு.க.,வின் இலவச அறிவிப்புகளால், தொழில் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளன.

இது குறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது:

ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில், மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய், மகளிருக்கு இலவச பஸ் என, பல திட்டங்கள் தொடங்கப்பட்டன.

இதற்காக ஏற்படும் செலவுகளை சமாளிக்க, தாழ்வழுத்த பிரிவில் உள்ள சிறு, குறுந்தொழில்களுக்கு, கிலோ வாட்டிற்கு, 35 ரூபாயாக இருந்த மின்சார நிலை கட்டணம், தற்போது 168 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர, காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை என, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, உச்ச நேர மின் கட்டணமாக, யூனிட் மின்சார கட்டணத்துடன் சேர்த்து, 15 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், சொத்து வரி, மூன்று முதல் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

இவற்றால், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் சார்பில், பல்வேறு இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆட்சிக்கு வரும் கட்சி, இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட, மின் கட்டணம், சொத்து வரி போன்றவற்றை மீண்டும் உயர்த்தும்.

அந்த சுமை, தொழில் நிறுவனங்கள் தலையில் தான் விழும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement