அனில் அம்பானியின் ரூ.3716 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

7


புதுடில்லி: ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் 3,716 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அமலாக்கத்துறையினர், சட்டவிரோத பணமோசடி வழக்கில் முடக்கி உள்ளனர்.


நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது சகோதரர் அனில் அம்பானி, 66. இவர், 2017- - 19- வரையிலான காலத்தில், 'யெஸ்' வங்கியிடம், 2,965 கோடி ரூபாய் கடன் வாங்கினார். இதை சட்ட விரோதமாக மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்தார். பின், இந்தத் தொகை வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.

முறைகேடு



விசாரணையில், அனில் அம்பானி குழுமத்திற்கு, யெஸ் வங்கி 11,000 கோடி ரூபாய் கடன் அளித்தும், அதை அவர் முறைகேடாக பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதுபோல, தனக்கு சொந்தமான, 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராடெல், ரிலையன்ஸ் டெலிகாம்' ஆகிய நிறுவனங்களுக்காக வாங்கிய கடன்களை, சட்ட விரோதமாக அனில் அம்பானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.


மொத்தம், 40,185 கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்துள்ளார். இந்த விவகாரத்தில், 8,997 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.


இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தொழிலதிபர் அனில் அம்பானியின், 'அனில் திருபாய் அம்பானி குழுமம்' மற்றும் அவர் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான, 40,000 கோடி ரூபாய் பண மோசடி வழக்கை விரைந்து விசாரிக்க, மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கும்படி, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டுக்கு செல்ல மாட்டேன் என அனில் அம்பானி உறுதி அளித்து இருந்தார்.


இந்நிலையில், அனில் அம்பானியின் வீட்டை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். இந்த வீடானது மும்பையின் பாலி ஹில் பகுதியில் 17 தளங்களுடன், 66 மீட்டர் உயரம் அளவுக்கு கட்டப்பட்டு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு 3,716 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்களின் சொத்துகளின் மதிப்பு 15 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

Advertisement