எங்களுக்கு ராஜ்ஜியம்... உங்களுக்கு தான் பூஜ்ஜியம்; முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி

7

மதுரவாயல்: வரும் சட்டசபை தேர்தலில் எங்களுக்கு ராஜ்ஜியம் கிடைக்கும். உங்களுக்கு தான் பூஜ்ஜியம் கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

மதுரவாயலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது;

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை அளிக்கப்படும் என்று அறிவித்தேன். உடனே ஸ்டாலின் என்ன சொன்னார்.. பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் ஒன்றாக சேர்ந்தால் பூஜ்ஜியம் தான் கிடைக்கும் என்றார். உங்களின் கனவு அப்படி இருக்கிறது. ஆனால் நாட்டை ஆளப்போவது யார் என்று தெரியும்?

திமுக கூட்டணிக்கு தேர்தலில் மக்கள் பூஜ்ஜியத்தை தான் கொடுக்க போகின்றனர். நம்முடைய கூட்டணிக்கு தான் மக்கள் ராஜ்ஜியத்தை தருவார்கள். யாருக்கு பூஜ்ஜியம்... ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு. எனவே பூஜ்ஜியத்தை பற்றி சிந்தித்து, சிந்தித்து உங்களின் காலம் தான் விரயமாகும்.

5000 ரூபாய் அறிவித்தது சூப்பர் ஹிட் ஆகிவிட்டதாக ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் இந்த அறிவிப்பின் மூலமாக அவர் தனது தேர்தல் பயத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். ஏதோ ஒரு நாடகத்தை நடத்தி, பொய்யான தோற்றத்தை உருவாக்கி, கவர்ச்சிகரமாக அறிவித்து மக்களின் வாக்குகளை தந்திரமாக பெறுவதற்கு தான் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

நாங்கள் 10000 ரூபாய் தருவோம் என்று அறிவித்தது தான் சூப்பர்ஹிட். விண்ணை தொடும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. வீட்டுவரி 100 சதவீதம்,கடை வரி150 சதவீதம் உயர்ந்து விட்டது. ஆண்டுதோறும் இந்த வரி 6 சதவீதம் உயர்ந்து கொண்டே போகும். மின்கட்டணம் இந்த ஆட்சியில் 57 சதவீதம் உயர்ந்துவிட்டது.

நான் அறிவித்த 10 ஆயிரம் ருபாய் அறிவிப்பை வடை சுடுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் நீங்கள் தான் வாயில் வடை சுடுகிறீர்கள். 5 ஆண்டுகளாக வடை சுட்டு, வடை சுட்டு மக்களுக்கு உங்கள் ஆட்சியின் மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

உங்க கனவ சொல்லுங்க என்றால் திமுகவுக்கு இந்த தேர்தலில் முடிவு கட்ட வேண்டும் என்பது தான் எங்களின் கனவு. திட்டங்களுக்கு பல்வேறு பெயர்களை வைப்பதில் முதல்வர் ஸ்டாலின் நம்பர் ஒன். தினம் ஒரு திட்டத்தின் பெயர் வைக்கிறீர்கள், இந்த பெயர்கள் எல்லாம் மக்களுக்கு தெரியுமா?

தினம் ஒரு பெயர் வைப்பார், திட்டத்தை அறிவிப்பார், போட்டோ ஷூட் எடுப்பார், அதோடு எல்லாம் முடிந்தது. பெயர் வைப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும். நாட்டு மக்களுக்காக அல்ல.. தம் வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்யும் கட்சி திமுக.

ஸ்டாலினுக்கு பதற்றம் அதிகரித்துவிட்டது, தோல்விபயத்தில் ஏதேதோ பேசுகிறார். இங்கே நடப்பது சட்டசபை தேர்தல். யார் ஆட்சிக்கு வரவேண்டும், வரக்கூடாது என்று நடக்கும் தேர்தல். இது தெரியாமல் தமிழகத்திற்கும், என்டிஏவுக்கும் நடக்கும் தேர்தல் என்று பேசுகிறார்.

இன்றைக்கு திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் தடையில்லாமல் நடக்கிறது. மக்கள் எண்ணுவது எல்லாம் ஒரு நல்ல கட்சியின் ஆட்சி. நீங்கள் கூட்டணியை நம்பி தேர்தலை சந்திக்கிறீர்கள், நாங்கள் கூட்டணியும் வைத்திருக்கிறோம், மக்களையும் நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. முன்பெல்லாம் டிவியை ஆன் செய்தால் தங்கம், வெள்ளி விலை என்ன என்பது பற்றிய செய்திகள் வரும். ஆனால் இன்றைக்கு கொலை நிலவரம் என்ன என்பது பற்றிய செய்திகள் தான் வருகிறது.

இவ்வாறு இபிஎஸ் பிரசாரத்தில் பேசினார்.

Advertisement