அமெரிக்காவை அச்சுறுத்தும் பாம் சூறாவளி; 4 கோடி பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நியூயார்க்: பாம் சைக்ளோன் சூறாவளியால் சிக்குண்டுள்ள அமெரிக்காவில் கிட்டத்தட்ட 4 கோடி பேரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் ஹெர்னான்டோ என்ற பனிப்புயல் வீசி வருகிறது. குறிப்பாக நியூயார்க், நியூ ஜெர்சி நகரங்கள் 10 ஆண்டுகளில் இல்லாத பாதிப்புகளை சந்தித்துள்ளது. பனிப்புயல் தொடர்ந்து வீசிக் கொண்டே இருப்பதால் எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து காணப்படுகிறது.

சாலைகள் முற்றிலும் பனியால் மூடப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொலைத்துள்ளனர். லட்சக்கணக்கான வீடுகளில் மின்சார வினியோகமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. நியூயார்க், நியூ ஜெர்சி, போஸ்டன், பிலடெல்பியா நகரங்களில் 4 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 10000க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு அல்லது முடக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஹெர்னான்டோ பனிப்புயலை பாம் சைக்ளோன் (bomb cyclone) என்று வானிலை ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளனர். பாம் சைக்ளோன் என்பது புயலின் அழுத்தமானது 24 மணி நேரத்திற்குள் 24 மில்லிபாருக்கும் (millibar - புயலின் போது வளிமண்டல அழுத்தத்தை அளவிடும் அலகு) குறைவாக குறையும் போது உருவாவது ஆகும்.

தற்போது ஹெர்னான்டோ பனிப்புயல் அழுத்தமானது 988 மில்லிபார் ஆக மாறி இருக்கிறது. எனவே அதிவேகமாக வலுப்பெற்று பாம் சைக்ளோன் ஆக மாறி சூறாவளி, கடும் பனிப்புயல் என பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement