நேரு மீது வழக்கு பதியாவிட்டால் சி.பி.ஐ., விசாரணை கோருவோம் : லஞ்ச ஒழிப்பு துறைக்கு அ.தி.மு.க., கடிதம்

சென்னை : 'சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதியாவிட்டால், சி.பி.ஐ., விசாரணை கோருவோம்' என, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பு இயக்குநர் துரைகுமாருக்கு, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் எழுதிய கடிதம்: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு மீது ஊழல் வழக்கு பதிவு செய்யுமாறு, கடந்த 2025 அக்டோபர் 27ம் தேதி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. ஆனாலும், அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.


இது தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என, கடந்த 20ம் தேதி உத்தரவிட்டது.


உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அமைச்சர் நேரு மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யாமல், லஞ்ச ஒழிப்புத் துறை சட்டத்தை மீறுவது கவலை அளிக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கடமையை செய்யாமல், ஊழலை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறீர்கள்.


அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்து, தங்கள் இணையதளத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில், கடமையை செய்ய தவறியதற்காக, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement