தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் இன்று ஆலோசனை

சென்னை: சென்னை வந்துள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் தலைமையில் ஏழு பேர் குழுவினர், நேற்று காலை டில்லியில் இருந்து சென்னை வந்தனர்.

பின், புதுச்சேரி சென்று, அம்மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து, சென்னை திரும்பியுள்ள அதிகாரிகள், இன்று காலை, எம்.ஆர்.சி., நகரில் உள்ள நட்சத்திர ஹோட்ட லில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம், தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பெறவுள்ளனர்.

மாலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், கமிஷனர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். விரிவான தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளனர்.

இதை தொடர்ந்து நாளை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய அரசின் 23 துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

Advertisement