ராஜ்குமார் கடத்தல் வழக்கு 9 பேர் விடுதலையை  எதிர்த்த மனு தள்ளுபடி

சென்னை: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், ஒன்பது பேர் விடுதலையை எதிர்த்து, காவல் துறை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மறைந்த நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட நால்வரை, சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2000ம் ஆண்டு கடத்தி சென்றார்.

பல நாட்கள் காட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த ராஜ்குமாரை விடுதலை செய்ய, வீரப்பனிடம், தமிழக, கர்நாடக மாநில அரசுகள் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது; பின், அவர் விடுவிக்கப் பட்டார்.

இந்த கடத்தல் வழக்கில், வீரப்பன், அவரது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, மல்லு, ரமேஷ், கோவிந்தராஜ், மாறன் ஆகியோருக்கு எதிராக, ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணையில் இருந்தபோது, வீரப்பன் உள்ளிட்ட சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வழக்கை விசாரித்த கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தராஜ், மாறன் உட்பட 9 பேரை, கடந்த 2018ல் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், காவல் துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, விடுதலை செய்த உத்தரவை உறுதி செய்வதாக கூறி, காவல் துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement