வெயில் அதிகரிக்கும் நேரத்தில் குடும்ப தொற்றாகிறது காய்ச்சல்

சென்னை: 'சீதோஷ்ண நிலை மாற்றத்தால், குடும்பத்தில் அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதால், வீட்டில் இருந்தாலும், முகக்கவசம் அணிவது அவசியம்' என, பொது சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் பனிப்பொழிவு குறைந்து, வெயில் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால், காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு, வாந்தி, பேதி உள்ளிட்டவற்றால், மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அனைவரும் பாதிக்கப்படும் குடும்ப தொற்றாக காய்ச்சல் மாறி வருகிறது.

இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மாலை நேர கிளினிக்குகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது பரவி வருவது, 'ப்ளூ' என்ற இன்ப்ளுயன்ஸா வகை காய்ச்சல் என்றாலும், அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், முன்தடுப்பு அவசியம் என, பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:

இன்ப்ளுயன்ஸா, டைபாய்டு போன்ற காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர் முகக்கவசம் அணிவதன் வாயிலாக, குடும்பத்தினருக்கோ, மற்றவர்களுக்கோ வைரஸை பரப்பாமல் தடுக்க முடியும்.

அதேபோல், வீட்டில் இருப்போர், அடிக்கடி கைகளை கழுவுவதுடன், பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பை தவிர்த்தாலே, மற்றவர்களுக்கும் காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம்.

அதேபோல், டெங்கு காய்ச்சலை தடுக்க, வீட்டின் சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும். எவ்வித காய்ச்சல் என்றாலும், டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement