இந்தியா - இஸ்ரேல் இடையே கையெழுத்தாகிறது முக்கிய ஒப்பந்தங்கள்!: மோடியை நேரில் வரவேற்றார் பிரதமர் நெதன்யாகு
ஜெருசலேம்: இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இன்று இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ராணுவத் தளவாடங்கள் வாங்குவது உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கு நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார் நெதன்யாகு.
பிரதமர் நரேந்திர மோடி கடைசியாக கடந்த 2017, ஜூலையில் மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் சென்றிருந்தார். அப்போது முதல் இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவு ஆழமாக வளர்ந்து வருகிறது.
இந்தச் சூழலில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இஸ்ரேல் சென்றார்.
டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியான் விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் விமானம் நேற்று தரையிறங்கியது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தன் மனைவி சாராவுடன் நேரடியாக விமான நிலையத்திற்கே வந்திருந்து, பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றார்.
தன் மனைவி சாரா அணிந்திருந்த உடையையும், பிரதமர் மோடியின் சட்டைப் பையில் இருந்த கைகுட்டையையும் சுட்டிக் காட்டிய நெதன்யாகு, இருவரும் காவி நிறத்தில் இருப்பதாக கலகலப்பாக பேசி, திக்குமுக்காட வைத்தார்.
புதிய உச்சம்
இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின், விமான நிலையத்திலேயே இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினர்.
இது குறித்து தன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, 'இஸ்ரேலுக்கு ஒன்பது ஆண்டுக ளுக்கும் பின் மீண்டும் வந் தது மகிழ்ச்சி அளிக்கிறது.
'என் நண்பர் நெதன்யாகு அளித்த சிறப்பான வரவேற்பு என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது. இரு நாடுகளின் உறவும் புதிய உச்சத்தை தொடும்.
'அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, விவசாயம், திறன் பங்களிப்பு, பாதுகாப்பு, வர்த்தகம் என பல்வேறு முக்கிய துறைகளில் ஒன்றாக கைகோர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்' என குறிப்பிட்டுள்ளார்.
முக்கியத்துவம்
சமூக வலைதளப் பதிவில் நெதன்யாகு, 'எங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட நட்பு, இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட ஆழமான உறவை பிரதிபலிக்கிறது. நாளை நாங்கள் இருவரும் சந்தித்து பேசப் போகிறோம்.
'அப்போது, பொருளாதாரம், பாதுகாப்பு, துாதரக ரீதியிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்' என, குறிப்பிட்டு உள்ளார். மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வரும் சூழலில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்று உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், இஸ்ரேல் சென்ற நம் ராணுவ அமைச்சக செயலர், இரு நாட்டுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு குறித்த மிக முக்கியமான உடன்பாட்டில் கையெழுத்திட்டு இருந்தார். நம் நாடு 'சுதர்சன் சக்ரா' என்ற வான் பாதுகாப்பு கவச அமைப்பை சொந்தமாக உருவாக்கி வருகிறது.
இதற்கு வலுசேர்க்கும் வகையில், இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்தின் சில அம்சங்களை பெறுவது குறித்து நெதன்யாகுவிடம், பிரதமர் மோடி பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
நம் பிரம்மோஸ் ஏவுகணையை விட, பன்மடங்கு வேகத்தில் பாயும் திறன் கொண்ட 'கோல்டன் ஹாரிஸான்' ஏவுகணையை, நமக்கு வழங்க இஸ்ரேல் விருப்பம் தெரிவித்திருந்தது.
இந்த ஏவுகணையை வாங்குவது குறித்தும் இன்று நடக்கவுள்ள பேச்சின்போது இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு நவம்பரில் இஸ்ரேல் சென்ற மத்திய வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல் இரு நாட்டுக்கும் இடையே தடையற்ற வர்த் தக ஒப்பந்தம் தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சு களை துவக்கி வைத்தார்.
பிரதமரின் தற்போதைய பயணத்தால், அந்த பேச்சுகள் அடுத்த கட்டத்திற்கு நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச உள்ளார்.
இஸ்ரேலின் முன்னணி நாளிதழான 'த ஜெருசலேம் போஸ்ட்' பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், தன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு கவுரவித்தது. நாளிதழின் பெயர் ஆரம்பிக்கும் 'த' என்ற எழுத்தை நம் தேசிய சின்னம் போல வடிவமைத்து, மூவர்ண கொடியின் நிறத்தையும் சேர்த்து அழகாக அச்சிட்டுள்ளது. 'நமஸ்தே' என்ற வார்த்தையை ஹிந்தியிலும், அந்நாட்டின் ஹீப்ரூ மொழியிலும் கொட்டை எழுத்தில் பதிவிட்டு, இரு புராதன நாடுகளும் புதிய அத்தியாயத்தை துவக்குகின்றன என பெருமிதம் தெரிவித்துள்ளது. தவிர பிரதமர் மோடியின் புன்முறுவல் புகைப்படத்தையும் பெரிய அளவில் அச்சிட்டு, அவரை வரவேற்பதாக அடுத்தடுத்து செய்திகளை பதிவிட்டிருந்தது. இஸ்ரேல் - இந்தியா இடையிலான நல்லுறவு பற்றியும் முதல் பக்கத்தில் புகழ்ந்து எழுதி இருந்தது.
'நெசட்' எனப்படும், இஸ்ரேல் பார்லிமென்ட் வளாகம், நம் தேசிய கொடியின் மூவர்ண நிற விளக்கு ஒளியில் ஜொலித்தது. பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், இஸ்ரேல் அரசு இந்த ஏற்பாட்டை செய்தது. வழக்கமாக ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே இஸ்ரேல் இந்த கவுரவத்தை தரும். தற்போது பிரதமர் மோடியின் அரசுமுறை பயணத்தை ஒட்டி, இஸ்ரேல் அரசு இந்தியாவுக்கு இந்த கவுரவத்தை அளித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவுடனான நல்லுறவை, இஸ்ரேல் எந்த அளவுக்கு விரும்புகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
ஜெருசலேம் நகரில் உள்ள ஹோட்டல் கிங் டேவிட்டில் பிரதமர் மோடி நேற்றிரவு தங்கினார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக இந்திய வம்சாவளியினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். கேரளத்தின் பிரசித்தி பெற்ற திருவாதிரா நடனம், இஸ்ரேலின் ஹவா நகிலா நாட்டுப்புற நடனம் மற்றும் ராஜஸ்தானின் கூமர் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. மாற்றுத்திறன் கொண்ட பாடகர்களும், தங்களது இனிமையான குரலில் பாடல்களை பாடி அசத்தினர்.
மேலும்
-
ஜே.இ.இ., முதன்மை தேர்வு தமிழக மாணவர் 2ம் இடம்
-
கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை
-
இலவச மொபைல் விண்ணப்பங்கள் வரவேற்பு
-
2025ல் அரசு போக்குவரத்து கழகங்களில் 1,444 விபத்துகள்; 463 பேர் உயிரிழப்பு
-
தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் இன்று ஆலோசனை
-
ராஜ்குமார் கடத்தல் வழக்கு 9 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி