மாநில கிரிக்கெட் போட்டி: வெண்கலம்  வென்று ராமநாதபுரம் வீரர்கள் சாதனை

ராமநாதபுரம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற 'இது நம்ம ஆட்டம் 2026' மாநில அளவிலான 'ஸ்ட்ரீட் கிரிக்கெட்' போட்டியில் ராமநாதபுரம் அணியினர் மூன்றாமிடம் பெற்று ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகை, வெண்கலம் வென்றனர்.

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வரின் இளைஞர் விளையாட்டு திருவிழா 'இது நம்ம ஆட்டம் 2026' ஒன்றிய அளவில் நடைபெற்றது. ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியில் நயினார்கோவில் ஒன்றிய அணியினர் முதலிடம் பெற்று தலா ரூ.3000 வீதம் ரூ.21ஆயிரம் பரிசுத்தொகை பெற்றனர்.

தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டியிலும் வென்று ரூ. 42 ஆயிரம் பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர். சென்னை நேரு பார்க் விளையாட்டு அரங்கத்தில் பிப்.,21 ல் மாநில அளவிலான ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியில் நயினார்கோவில் அணியினர் பங்கேற்றனர். இதில் மூன்றாமிடம் பிடித்து துணை முதல்வர் உதயநிதியிடம் வெண்கலப்பதக்கம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பரிசு பெற்றுள்ளனர்.

மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள வீரர்கள் மகேந்திரன், யுவ மணிகண்டன், முகமது இப்ராகிம் அலி, ஹரிகரன், கருணாகரன், யோகேஸ்ராஜா, அணியின் மேலாளர் சர்மா ஆகியோரை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், நயினார்கோவில் பி.டி.ஓ., தேவ பிரியதர்ஷினி, ஊர் மக்கள் பாராட்டினர்.

Advertisement