மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

பாகாயம்: ஒருதலை காதலால், கல்லுாரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர், தற்கொலை செய்து கொண்டார்.

வேலுார் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்த அப்சல் ஷெரிப் என்பவர் மகள், ஆயிஷா பர்வீன், 19, பயோடெக். 2ம் ஆண்டு மாணவி. வேலுார் அரியூரை சேர்ந்த விக்னேஷ், 19, என்பவர், பிளஸ் 2 வரை படித்து விட்டு, வேலையில்லாமல் இருந்தார்.

இந்நிலையில், மாணவி ஆயிஷா பர்வீனை, ஒருதலையாக அவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு, மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று மதியம், 12:30 மணிக்கு, ஆயிஷா பர்வீன் தன் கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்து, தகராறில் ஈடுபட்ட விக்னேஷ், மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.

இதையடுத்து, தன் பெற்றோருக்கு மொபைல் போனில், மாணவி தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த மாணவியின் பெற்றோர், அவரை மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்து, போலீசில் புகார் அளித்தனர்.

இதற்கிடையே, போலீசாரின் விசாரணைக்கு பயந்த விக்னேஷ், தன் வீட்டில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை மீட்ட பாகாயம் போலீசார், அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

Advertisement